Tamilnadu
oi-Vishnupriya R
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற விடுப்பு எடுத்தததால் பணிமனை மேலாளர் அதிகார போக்குடன் நடந்துக் கொள்வதால் தனக்கு நியாயம் வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (58). இவர் தருமபுரி மண்டலம், சேலம் கோட்டம், பனிமலையில் திருப்பத்தூரில் இருந்து தருமபுரி செல்லும் பேருந்தில் ஓட்டுநராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வருடம் கண்ணனின் கால் உடைந்ததால் 25 நாட்கள் விடுமுறை எடுத்தார். அதே போல தனது மகன் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 30 நாள் மகனை பார்த்துக் கொண்டார். மேலும் கண்ணனுக்கு மருத்துவ விடுப்பானது 251 நாட்கள் இருக்கின்றதாம்.
இந்த நிலையில் கண்ணன், வழக்கமாக இயக்கும் பேருந்தில் ஏறி ஓட்டுநர் வேலையை செய்தார். அப்போது அங்கு வந்த பணிமனை மேலாளர் செல்வகுமார், கண்ணனை அழைத்து “வழக்கமான திருப்பத்தூர் டூ தருமபுரி பேருந்து வேண்டாம். பெங்களூர் செல்லும் பேருந்தில் ஓட்டுநர் பணியை செய்யுமாறு” உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்த கண்ணன், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதனை அறிந்த பணிமனை மேலாளர் செல்வகுமார் மற்றும் செக்கிங் இன்ஸ்பெக்டர் தமிழரசு, கட்டுப்பாட்டாளர் சத்யராஜ் ஆகியோர் இணைந்து “கலெக்டரே சொன்னாலும் நாங்க சொல்றது தான் இங்க நடக்கும், நான் சொல்ற பேருந்தில் ஓட்டுனராக வேலை செய்தால் செய் இல்லையென்றால் வேலையை விட்டு கிளம்பு” என ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த கண்ணன் தனக்குரிய நியாயம் கிடைக்க வேண்டும். மேலும் அதே பேருந்தில் ஓட்டுநராக செயல்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.


