Last Updated:
2023 ஐபிஎல் சீசனில் இவர் அதிரடியாக விளையாடி, சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
சென்னை அணியின் முன்னாள் வீரர் அஜிங்யா ரஹானே முதல்தர போட்டிகளில் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஹானே 2007-08 ரஞ்சி டிராபி சீசனில் மும்பை அணிக்காக தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். அவர் முதல் தர கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வாசிம் ஜாஃபருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
சர்வதேச போட்டிகளை பொருத்தளவில் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ரஹானே சர்வதேச அளவில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பாகச் செயல்பட்டவர் என்பதால், அவர் “ஓவர்சீஸ் எக்ஸ்பர்ட்” (Overseas Expert) என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் அழைத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றபோது, ரஹானே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார்.
2023 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை அடிப்படை விலையில் (base price) ஏலத்தில் எடுத்தது. அந்த சீசனில் இவர் அதிரடியாக விளையாடி, சென்னை அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த தொடரில் அஜிங்க்யா ரஹானே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 326 ரன்கள் எடுத்தார். அவர் 14 போட்டிகளில் விளையாடி, 11 இன்னிங்ஸில் பேட்டிங் செய்தார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 71 ரன்கள், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 172.49 ஆக இருந்தது, இது சென்னை அணியின் கோப்பை வெற்றிக்கு மிக முக்கியமான பங்களிப்பாகக் கருதப்பட்டது.
அணியின் புதிய கேப்டனாக இளம் வீரரை தயார் செய்ய வேண்டிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார் அஜிங்யா ரஹானே.
August 21, 2025 6:42 PM IST


