Last Updated:
ICC Champions Trophy | பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, முகமது ஷமி காயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் அவர்கள் காயம் ஏதும் இல்லை என விளக்கமளித்தார்.
நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்களான ரோகித் சர்மாவும், முகமது ஷமியும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் விளக்கமளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி அபாரமாக தனது 51ஆவது ஒருநாள் சதத்தை விளாசினார். மேலும் ஷ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் ஆகியோர் விராட் கோலியுடன் இணைந்து வெற்றியை பெற உதவினர்.
அந்த போட்டியின்போது, முகமது ஷமியும், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் அசௌகரியமாக இருந்தனர். குறிப்பாக முகமது ஷமி பவுலிங் வீசிய முதல் ஓவரிலேயே அது எதிரொலித்தது. முதல் ஓவரில் 5 வைட் பந்துகள் வீசினார் ஷமி. மேலும் முதல் இன்னிங்சிலேயே அவ்வப்போது மைதானத்திற்கு வெளியே சென்று சிகிச்சை எடுத்து வந்தார்.
இதனால் மொத்தமாகவே ஷமி 8 ஓவர் தான் பந்துவீசினார். 43 ரன்களை விட்டுக்கொடுத்த அவர், விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இதனால் ஷமி காயமடைந்துள்ளார் என தகவல்கள் வரத்தொடங்கியது. மேலும் இந்திய கேப்டனான ரோகித் சர்மாவும், இந்திய அணியின் பந்துவீச்சின்போது காயம் காரணமாக அவதியுற்றார். அதிலும் பாபர் அசாமின் விக்கெட்டிற்கு பிறகு, ரோகித் சர்மா மைதானத்தில் முழு உடற்தகுதியுடன் இல்லை என்று அனைவரும் கூறினர். ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா பேட்டிங் செய்தபோது, ரோகித் சர்மா தனது வழக்கமான அதிரடியை காட்டி ரன்களை விளாசினார்.
போட்டி முடிந்த பிறகு, ஷ்ரேயஸ் ஐயரிடம் முகமது ஷமி மற்றும் ரோகித் சர்மாவின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “எனக்கு தெரிந்த வரையில் இருவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அவர்கள் முழு உடற்தகுதியுடன் தான் உள்ளார்கள்” என பதிலளித்தார்.
இதையும் படிக்க: 5 நாட்களிலேயே தொடரை விட்டு வெளியேறிய பாகிஸ்தான்.. ரசிகர்கள் அதிருப்தி
நேற்று நடைபெற்ற வங்கதேசம் – நியூசிலாந்து இடையிலான போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா தனது அடுத்த லீக் போட்டியில், நியூசிலாந்து அணியை வரும் மார்ச் 2ஆம் தேதி எதிர்கொள்ளவிருக்கிறது.
February 25, 2025 12:15 PM IST


