Last Updated:
மீரட்டில் சவுரவ் ராஜ்புத் கொலை வழக்கில் அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் காதலன் சஹில் ஷுக்லா ஆகிய இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மீரட்டில் கணவரை கொலை செய்து ப்ளூ டிரம்மில் அடைத்த வழக்கில் மனைவி மற்றும் அவரது காதலனுக்கு மாவட்ட நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சவுரவ் ராஜ்புத்தை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் காதலன் சஹில் ஷுக்லா ஆகியோர் கடந்த ஆண்டு கத்தியால் குத்தி கொலை செய்தனர். உடலை மறைக்க ப்ளூ டிரம்மில் போட்டு சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடினர். பின்னர், இருவரும் ஜோடியாக இமாச்சல பிரதேசத்திற்கு தப்பியோடினர்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்தது. 22-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் சாட்சியங்கள் மற்றும் 126 விசாரணைகள் என சுமார் 13 மாதங்களாக நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா, கைதான இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, தண்டனை விவரங்களுக்காக வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்துக்கு வெளியில் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.


