Last Updated:
காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டம் தொடர தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
புதுச்சேரியின் காரைக்காலில் மீன் பிடித்துறைமுக விரிவாக்க பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டத்தை தொடர முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காரைக்காலில் மீன்பிடித் துறைமுகமானது 2012-ல் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த துறைமுகத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக சுமார் 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மீன்பிடித்துறைமுக பகுதியில் ஸ்மார்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுக அபிவிருத்திட்டம் அமைக்க கடந்த டிசம்பர் மாதம் முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்தார்.
இதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் காரைக்காலைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்ற தீர்ப்பாயம், புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தால் நடந்தப்பட்ட கருத்து கேட்பில் திட்டத்துக்கு ஆதரவாளராக இருக்கும் மீன்வளத்துறை இயக்குநரே தனது வழக்கிற்கு ஆணையத்தின் உறுப்பினராகவும், நீதிபதியாகவும் செயல்பட்டு உள்ளதை ஏற்க முடியாது என குறிப்பிட்டது.
திட்டம் தொடர அனுமதிக்கப்பட்டால் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தது. மேலும், தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதியரசர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கார்கவா ஆகியோர் இறுதியாக முடிவு எடுக்கும் வரை கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அளித்த அனுமதி நிறுத்திவைக்கப் படுவதாக தெரிவித்தனர். இவ்வழக்கு வரும் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Puducherry (Pondicherry)
மீன் பிடித்துறைமுக விரிவாக்க பணி.. “அனுமதி இல்லாமல் தொடர முடியாது..” தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!

