அலோர் ஸ்டார்:
கோலா நேராங் (Kuala Nerang) அருகே உள்ள கம்போங் பெரிக் பகுதியில், மீன் குட்டை ஒன்றில் விழுந்து 4 வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் அய்யாஷ் அஹ்மட் சஜித் அகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை சுமார் 6:15 மணியளவில், சிறுவன் மீன் குட்டைக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர் தேடத் தொடங்கினர்.
தேடுதல் வேட்டையின் போது, சிறுவனின் காலணிகள் மீன் குட்டையில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர் குட்டையிலிருந்து மீட்கப்பட்டார். மயக்க நிலையில் இருந்த சிறுவன், உடனடியாக ஜிரா (Jitra) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இது குறித்துப் பாடாங் தெராப் துணை போலீஸ் சூப்பரண்ட் அஃப்சானிஷாம் முகமது ஷாம் கூறுகையில்: சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. நீரில் மூழ்கியதே உயிரிழப்பிற்கான காரணம் என்பது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது,” எனத் தெரிவித்தார்.
தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மீன் குட்டையில் விழுந்து 4 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

