Last Updated:
பிசிசிஐ-ன் சிறப்புப் பயிற்சி மையத்தில் தங்கியுள்ள பாண்டியா, “பெர்ஃபார்மன்ஸ் பிளாக்” என்ற நீண்டகால உடற்தகுதிப் திட்டத்தின் கீழ் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஹர்திக் பாண்டியா தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கான மெகா ப்ளான் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குத் தொடர்ச்சியாக ஏற்படும் காயங்கள் காரணமாக, அவரை இருதரப்பு தொடர்களில் தேர்வு செய்வதை விட, 2027 ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்காக அவரை முழு உடற்தகுதியுடன் தயார்படுத்துவதற்கே பிசிசிஐ முதன்மை முன்னுரிமை அளித்து வருகிறது.
கடந்த ஐபிஎல் 2026 சீசனின் இறுதிப் பகுதியிலிருந்து ஹர்திக் பாண்டியா பல்வேறு காயம் சார்ந்த சிக்கல்களைச் சந்தித்து வருகிறார். சமீபத்தில் தொடைப் பகுதியில் ஏற்பட்ட லேசான காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவரால பங்கேற்க முடியாமல் போனது.
தற்போது பிசிசிஐ-ன் சிறப்புப் பயிற்சி மையத்தில் தங்கியுள்ள பாண்டியா, “பெர்ஃபார்மன்ஸ் பிளாக்” என்ற நீண்டகால உடற்தகுதிப் திட்டத்தின் கீழ் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் முழு உடற்தகுதியை எட்டும் நிலையை நெருங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான வீரர் என்பதால், 2027 உலகக்கோப்பையில் அவர் முழுமையான உடற்தகுதியுடன் விளையாடுவது இந்திய அணிக்கு அவசியமாகிறது. எனவே, வரவிருக்கும் அனைத்து இருதரப்பு டி20 மற்றும் 50 ஓவர்கள் தொடர்களிலும் அவர் விளையாட வேண்டிய அவசியமில்லை என்றும், முக்கியமாக 50 ஓவர் போட்டிகளுக்கு மட்டுமே அவர் முன்னுரிமை கொடுத்துப் பயன்படுத்தப்படுவார் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் தேசிய அணியின் உடற்தகுதிப் பயிற்சிகளில் கவனம் செலுத்தி வரும் பாண்டியா, மறுபுறம் ஐபிஎல் டிரேட் பேச்சுவார்த்தைகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


