Last Updated:
டெக்சாஸ் முதல் மாசசூசெட்ஸ், மிசிசிப்பி, கரோலினா கடற்கரை பகுதிகளில் மீண்டும் பனிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அண்மையில் வீசிய பனிப்புயல் காரணமாக 50 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில், கடந்த 26 ஆம் தேதி கடும் பனிப்புயல் தாக்கியது. டெக்சாஸ் முதல் மாசசூசெட்ஸ் வரை உள்ள அமெரிக்காவின் கிழக்குப் பகுதி மாகாணங்கள் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மிசிசிப்பி நகரில் நெடுஞ்சாலைகளில் சூழ்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
மின் கட்டமைப்புகள் சேதமடைந்ததால் 8 லட்சம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் பாதிப்பில் இருந்தே இன்னும் மீண்டு வராத நிலையில், இந்த வார இறுதியில் மீண்டும் ஒரு பனிப்புயல் வீசும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாளை இரவு முதல் சனிக்கிழமை வரை கரோலினா கடற்கரையில் பனிப்புயல் உருவாகும் என்றும் இது சூறாவளியைப் போன்ற வலிமையைக் கொண்டிருக்கும் என்றும் வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பனிப்புயலுடன் மணிக்கு 40 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


