Last Updated:
இந்தியா-பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தொடர், இன்று மீண்டும் தொடங்குகிறது.
சிறிய இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் இன்று மீண்டும் தொடங்கவுள்ளன.
இந்தியா – பாகிஸ்தான் சண்டை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது. 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றத்தால் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்தம் புரிந்துணர்வு மேற்கொண்டதை அடுத்து சனிக்கிழமை முதல் மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது.
இன்னும் 12 லீக் ஆட்டங்கள், 4 பிளே-ஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 17 ஆட்டங்கள் நடைபெற வேண்டி உள்ள நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது.
எஞ்சியுள்ள போட்டிகள் பெங்களூரு, டெல்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை ஆகிய 6 மைதானங்களில் நடைபெறுகின்றன. பிளே ஆப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதிச் சுற்று போட்டி மே 29ஆம் தேதியும், எலிமினேட்டர் போட்டி மே 30ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி ஜூன் 1ஆம் தேதியும் இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் தேதியும் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்தது.
இன்னும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்குள் நுழைய அதிகாரப்பூர்வமாக 7 அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதால், போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று கடைசி இடத்தில் உள்ளது.


