[ad_1]
புதிய இணைப்பு
10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
நாடாளுமன்றில் அமளி துமளி : சபையில் இருந்து வெளியேறிய சபாநாயகர்
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒழுங்கற்றது என அறிவித்த சபாநாயகர் அதனை ஏற்க முடியாதெனக் கூறி நேற்று (10) நிராகரித்தார்.
அதுதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அரசியலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளைகளை சுட்டிக்காட்டி இன்று கருத்துரைத்தனர்.
இதனிடையே எழுந்த ஆளும் கட்சியின் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து கூறிக்கொண்டிருந்த போது எதிர்க்கட்சியினர் எழுந்து, கூச்சலிட்ட நிலையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த நிலையில் சபையை கொண்டு நடத்துவதற்கான சூழல் இன்மையில், நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, அக்கிராசனத்தில் இருந்து எழுந்து சென்றுவிட்டமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
இன்றைய (11.09.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 05.00 வரை தேசிய கணக்காய்வு திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு இல. 01 அங்கீகரிக்கப்படவுள்ளது, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் குறைநிரப்பு மதிப்பீடு இல. 02 அங்கீகரிக்கப்படவுள்ளது.
மாலை 05.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |