மிஸ்டர் டிரம்ப்.. ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை, இதுல புதுசா ஒன்னா.. புலம்பும் ஐடி ஊழியர்கள்..!
இந்திய ஐடி ஊழியர்களின் அமெரிக்கக் கனவுகளை குழிதோண்டிப் புதைத்த டிரம்ப் அரசு புதிதாக ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஏற்கனவே ஹெச்1பி விசாவுக்கான தேர்வு முறையில் சம்பளம் அடிப்படையிலான தேர்வு என்ற கட்டமைப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தற்போது டிரம்ப் தலைமையிலான ரிப்பபிளிக் கட்சியினர் ஹெச்1-பி விசா பெறுவதற்கான அடிப்படை சம்பள அளவை உயர்த்த கோரி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

விஸ்கான்சின் மாகாணத்தின் ரிப்பபிளிக் கட்சியினரான கிளென் க்ரோத்மேன் அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்புகளைக் காக்கும் நோக்கில் H-1B Modernization Act வாயிலாக ஹெச்1பி விசா பெறுவோருக்கான அடிப்படை சம்பள அளவீட்டை 60000 டாலரில் இருந்து 1,40,000 டாலர் வரையில் உயர்த்த வேண்டும் என்ற முக்கிய விதி மாற்றத்தை வேண்டி மசோதாவைச் சமர்ப்பித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களை நம்பி இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விசா ரினிவல்-க்கும் அதிகளவில் ஒப்புதல் அளிக்கப்படுவது இல்லை, இதேபோல் புதிய விசா விண்ணப்பத்தின் வருகையும் குறைந்திருக்கும் வேளையில் அமெரிக்காவில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களை மட்டுமே நம்பி மொத்த கார்ப்ரேட் நிறுவனங்களும் இயங்கி வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்காவில் அடிப்படை சம்பள கட்டுப்பாட்டை உயர்த்துவது மூலம் 10 விண்ணப்பம் வரும் இடத்தல் 1-2 விண்ணப்பங்கள் மட்டுமே வரும். 140000 டாலர் சம்பளம் எனில் மாதம் 11666 டாலர். இது இந்திய ரூபாயில் கணக்கிடும் போது கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாயாகும்.
இப்புதிய மசோதா ஒப்புதல் பெற்றால் மூத்த நிலை ஊழியர்களும், ஐஐடி, ஐஐஎம் கல்லூரிகள் போன்ற உயரிய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், பட்டதாரிகளுக்கு மட்டுமே விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.
கிளென் க்ரோத்மேன் மட்டும் அல்லாமல் ஓஹியோவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டரான ஜான் ஹஸ்டெட், செனேட் சபையில் இதேபோன்ற ஒரு மசோதாவை முன்வைத்துள்ளார்.
தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைப்படி வருடம் 60000 டாலர் சம்பளம் அல்லது முதுகலைப் பட்டம் அல்லது மேம்பட்ட கல்வித் தகுதியைக் கொண்டிருக்கும் பட்சத்தில் ஹெச்1பி விசா பெற முடியும்.
