2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டிரம்பை சந்தித்தார். அவரை வாஞ்சையுடன் வரவேற்ற டிரம்ப், கட்டித் தழுவிக் கொண்டார். தொடர்ந்து, டிரம்பின் முந்தைய ஆட்சியின் போது மோடியின் அமெரிக்க பயணம், மற்றும் டிரம்பின் இந்திய பயணம் அடங்கிய புகைப்படத் தொகுப்பை, மோடிக்கு டிரம்ப் புத்தகமாக பரிசளித்தார். “சிறந்த பிரதமர்” என்ற புகழுரையுடன் டிரம்ப் அதில் கையெழுத்திட்டுள்ளார். அந்த புத்தகத்தில் இருந்த புகைப்படங்களை, டிரம்ப் மற்றும் மோடி பார்வையிட்டனர்.
பின்னர், இருநாட்டு தலைவர்களும் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை முழுமையாக திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய டிரம்ப், இந்தியா அதிக வரி வசூலிப்பதாகவும், அதே அளவில் தாங்களும் திரும்ப வரி வசூலிப்போம் என்று கூறினார்.
பேச்சுவார்த்தை நடத்துவதில், பிரதமர் மோடி தன்னை விட சிறந்தவர் என்று பாராட்டிய டிரம்ப், 2030-க்குள் இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக்க இலக்கு (மிஷன் 500) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதற்கு ஏற்ப, அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான F35-யை இந்தியாவிற்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இதே போன்று, இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவை அதிகமாக இருப்பதாகவும், அதனை அதிக அளவில் அமெரிக்கா விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் டிரம்ப் கூறினார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இஸ்ரேல் மற்றும் இத்தாலி வழியாக சாலை, ரயில் மற்றும் கடல் மார்க்கமாக வர்த்தக போக்குவரத்து உருவாக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பை வலுப்படுத்தி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதிப்படுத்துவோம் எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
பயங்கரவாத தாக்குதலை ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று கூறிய டிரம்ப், 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்தார். இதனிடையே அதானி விவகாரம் குறித்து மோடியிடம் கேள்வி எழுப்பிய போது, “தனி நபர்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று பதில் அளித்தார்.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை, அணு ஆயுத ஒப்பந்தம், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இஸ்ரோ-நாசா இணைந்து செயல்படுத்தும் நிசார் திட்டம் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் சுமார் 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
February 14, 2025 12:15 PM IST