கோலாலம்பூர்:
மலேசியாவில் அதிகரிக்கும் மின்சாரத் தேவையைச் சமாளிக்கவும், ஆற்றல் பயன்பாட்டை முறைப்படுத்தவும் ‘தேசிய எரிசக்தித் திறன் கொள்கை மற்றும் செயல் திட்டம் 2.0’ (NEEAP 2.0 – 2026-2035) இன்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாகப் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த 10 ஆண்டு திட்டத்தின் மூலம் நாட்டிற்குச் சுமார் 21.5 பில்லியன் அமெரிக்க டாலர் (RM85.24 பில்லியன்) அளவிற்கு மின்கட்டணச் சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெற்ற 7-வது சர்வதேச நீடித்த நிலைத்தன்மைக்கான ஆற்றல் மாநாட்டில் (ISES 2026), பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நாசிர் இப்புதிய திட்டத்தை முறைப்படி தொடக்கி வைத்தார்.
வழக்கமான பயன்பாட்டுக் கணிப்புகளுடன் ஒப்பிடுகையில், நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் தேவையை 11.6 விழுக்காடு வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 8,15,382 ‘டெராஜூல்’ அளவுக்கு ஆற்றல் சேமிக்கப்படுவதோடு, 26.1 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு வெளியேற்றமும் தடுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் RM36 பில்லியன் தனியார் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 29,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முதலாவது திட்டத்திற்குப் கிடைத்த மகத்தான வெற்றி
முன்னதாக 2016 முதல் 2025 வரை அமல்படுத்தப்பட்ட முதல் கட்ட செயல் திட்டம், அதன் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளையும் தாண்டிச் சாதனை படைத்துள்ளது. இக்காலக்கட்டத்தில் 60,886 ஜிகாவாட்-மணிநேரம் மின்சாரம் சேமிக்கப்பட்டு, நாட்டிற்கு தோராயமாக 16.1 பில்லியன் ரிங்கிட் (US$3.9 பில்லியன்) பணச்சேமிப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் தரவு மையங்களின் (Data Centers) வளர்ச்சி வேகமாக அதிகரித்து வருகிறது. அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மலேசியாவில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருகின்றன.
இதனால் நாட்டில் மின்சாரத்திற்கான தேவை பல மடங்கு உயர்ந்துள்ள சூழலில், இப்புதிய 10 ஆண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



