இராகவன் கருப்பையா – தூயத் தமிழில் பேசும், எழுதும் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் தொடர் வளர்ச்சிக்கு நமது மின்னல் எஃப்.எம். வானொலி எந்த அளவுக்கு ஆதரவளிக்கிறது என்றால் அது ஒரு பெரிய கேள்விக்குறிதான்.
மலேசியப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மட்டுமின்றி, திரைப்பட, தொலைக்காட்சி நாடக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரையும் அவ்வானொலி பேட்டி கண்டு ஊக்குவிக்கிறது.
உள்நாட்டுக் கலைஞர்களை இவ்வாறு விளம்பரப்படுத்தி உற்சாகப்படுத்துவது உண்மையிலேயே வரவேற்கத்தக்க, பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
இத்தகைய அங்கீகாரம் அவர்களுடைய படைப்புகள் மட்டுமின்றி பொதுவான கலைத்துறை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
எனினும் எண்ணற்ற தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் புனையும் நூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எவ்வளவு இன்னல்களை அனுபவிக்க வேண்டியுள்ளது என்பதை மின்னல் எஃப்.எம். உணரத் தவறிவிட்டது.
நாவல், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள், போன்றவற்றை உள்ளடக்கியுள்ள தங்களுடையத் தொகுப்புகளை வெளியிடுவதில் பல எழுத்தாளர்கள் நிறையவே சிறமப்படுகின்றனர்.
உள்நாட்டுக் கலைஞர்களை விளம்பரப்படுத்தி ஊக்குவிப்பதைப் போல உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஆதரவளிப்பது தங்களுடையக் கடப்பாடுகளில் ஒன்று என்பதை மின்னல் எஃப்.எம். தெரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் எழுத்தாளர்கள் மாசற்றத் தமிழில் பேசுவார்கள். அவர்களுடைய மொழி வளத்தில் குளறுபடிகள் இருக்காது. தூயத் தமிழுக்கு பெயர் பெற்ற மின்னல் எஃப்.எம். வானொலிக்கு இந்த அம்சம் ஏற்புடையதாகவே இருக்கும்.
வாரம் ஒரு எழுத்தாளரை வானொலி நிலையத்திற்கு அழைத்து, அல்லது தொலைபேசி வழியாக பேட்டி கண்டு, அவரையும் அவருடைய படைப்பைப் பற்றியும் நூல் வெளியீடு பற்றியும் விரிவாகப் பேச வகை செய்ய வேண்டும்.
இப்படி ஒரு ஏற்பாட்டை மின்னல் எஃப்.எம். செய்யுமேயானால் ஆண்டு ஒன்றுக்கு மொத்தம் 52 எழுத்தாளர்களை அதன் நேயர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை அவ்வானொலியையேச் சாரும்.
தங்களுடைய படைப்புகளை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முற்படும் தமிழ் எழுத்தாளர்களுக்கு இது நல்லதொருக் களமாகவும் அமையும் என்பது உறுதி.
ஒருவரின் மனமகிழ்வுக்கு பல வழிகள் உள்ளன. எனினும் அவற்றில் சிறந்தது புத்தகம் வாசிப்பதுதான் என உளவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
“புத்தகத்தைப் போன்று வாழ்நாளில சிறந்ததொரு நண்பன் யாருமே இல்லை. நம் வாழ்வில் நாம் எதிர்நோக்கும் எதிர்மறையான விஷயங்களிலிருந்து மீள்வதற்கு புத்தகம்தான் மிகச் சிறந்த ஆயுதம்,” என்கிறார் பிரபல தன் முனைப்புப் பேச்சாளர் மு.கணேசன்.
எனவே இவ்வாறான சிறப்புகளைக் கொண்ட புத்தகங்களுக்கும் அவற்றைப் புனையும் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கென ஒவ்வொரு வாரமும் ஒரு மணி நேரம் ஒதுக்குவது குறித்து மின்னல் எஃப்.எம். பரிசீலிக்க வேண்டும்.