Last Updated:
2016 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை மின்னல் தாக்கி பிஹாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 பேர் வரை இருக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன
பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 5 பேர் நாளந்தா பகுதியைச் சேர்ந்தவர்கள். இதேபோன்று வைஷாலி மாவட்டத்தில் 4 பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து ஷேக்புறா, நவாதா, ஜெகனாபாத், அவுரங்காபாத், ஜாமு மற்றும் சமஸ்திப்போர் பகுதிகளில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கும், குஜராத், சத்தீஸ்கர் பகுதிகளில் 21ஆம் தேதி, 23ஆம் தேதி வரையிலும், பிகாரில் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் கடந்த மாதம் பக்சர் மாவட்டத்தில் ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். பிஹாரைப் பொருத்தளவில் மின்னல் தாக்கி ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மட்டும் 150 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
July 17, 2025 9:53 PM IST


