பல பில்லினியர்கள் தங்களது குழந்தை பருவத்தில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்ட பின்னரே வாழ்வில் முன்னேறியுள்ளனர். சிலருக்கு மின்சாரம், தண்ணீர் வசதி கூட கிடைக்காமல் இருப்பினும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால், அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் இந்திய-அமெரிக்க கோடீஸ்வரரான ஜெய் சௌத்ரி ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புகழ்பெற்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான ஜெஸ்கேலரின் CEO ஆவார். ஏழ்மையில் வளர்ந்த ஜெய்க்கு குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. அதற்காக அவர் சோர்ந்து போய் விடவில்லை. கடுமையாக உழைத்து பெரும் செல்வத்தை ஈட்டினார். தற்போது அவரது வாழ்க்கைப் பாதை பலருக்கும் உத்வேகமாக உள்ளது.
ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, ஜூலை 16 நிலவரப்படி, ஜெயின் நிகர மதிப்பு 11.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.96960 கோடி) ஆகும். அவரும் அவரது குடும்பத்தினரும் ஜெஸ்கேலரில் சுமார் 40 சதவீத பங்கை வைத்துள்ளனர், அதன் சந்தை மதிப்பு USD 30.91 பில்லியன் ஆகும். 65 வயதான இவர் ஹிமாச்சல பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமமான பனோஹ் கிராமத்தில் பிறந்தார்.
தனது 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் வறுமையில் வளர்ந்தார். அவரது பெற்றோர் சிறு விவசாயிகளாக இருந்தனர், மேலும் அவர்களது மூன்று மகன்களில் ஜெய் இளையவர் ஆவார். ஜெய் தனது முழு நேரத்தையும் படிப்பிற்காக அர்ப்பணித்தார். ஐஐடி, பிஎச்யூவில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இளங்கலை முடித்த பிறகு, ஜெய் 1980 ஆம் ஆண்டில் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் எம்எஸ் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார்.
ஜெய் சௌத்ரி மற்றும் அவரது மனைவி ஜோதி ஆகியோர் தங்கள் வேலையை விட்டுவிட்டு, 1997 இல் தனது முதல் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான செக்யூர் ஐடி-யைத் தொடங்கினார். இதற்கு தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் (சுமார் 500,000 அமெரிக்க டாலர்கள்) பயன்படுத்தினர்.
ஜெஸ்கேலர் தொடங்குவதற்கு முன், சவுத்ரி நான்கு தொழில்நுட்ப நிறுவனங்களை நிறுவினார், இந்த ஸ்டார்ட் அப்கள் அனைத்தும் மற்ற நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன. அவை செக்யூர்ஐடி, கோர்ஹார்பர், ஸிபர் டிரஸ்ட் மற்றும் ஏர் டிஃபென்ஸ் ஆகும்.
2007ஆம் ஆண்டில் ஜெய் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் ஏற்கனவே வெற்றிகரமான தொழில்முனைவோராக இருந்தனர். இதனையடுத்து அடுத்த ஆண்டு 2008 இல், அவர் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஜெஸ்கேலரை நிறுவினார். பே ஏரியாவில் இருந்து இடம் பெயர்ந்த பிறகு, ஜெய் தற்போது நெவாடாவில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
