பி.ஆர்.ராஜன்
கோலாலம்பூர்,
மலேசிய இந்தியர்களின் குறிப்பாக பி40 பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் பட்ஜெட்டில் ஒதுக்கி வரும் 100 மில்லியன் ரிங்கிட் அந்த சமுதாயத்தைச் சென்றடைவதில் மிகப் பெரிய தாமதம் ஏற்பட்டிருப்பது ஏன் என்று பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2025 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் இன்றளவும் இந்திய சமுதாயத்தில் தேவைப்படும் தரப்பினருக்கு இன்னும் போய்ச்சேரவில்லை. மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான ப.பிரபாகரன் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விரைந்து தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பேசிய காப்பார் (பாஸ்- பெரிக்காத்தான் நேஷனல்) நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹாஜ்ஜா ஹலிமா அலி அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் இந்த நிதியை வழங்குவதில் அப்படி என்னதான் சிரமம் இருக்கிறது. இந்த நீண்ட நெடிய தாமதத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையில் பிரபாகரன் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்திய சமுதாயத்தினர் இந்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை தங்களின் நல்வாழ்வுக்கு வழங்கப்படும் என்று காத்திருந்து ஏமாந்து போயிருக்கின்றனர். இந்திய சமுதாயத்தைக் கைதூக்கி விடுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தொகையை வழங்குவதற்கு இவர்களுக்கு ஏன் கைவரவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நீண்ட நெடிய தாமதம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஏற்கெனவே 45 குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு கையொப்பம் இடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றளவில் அதில் ஒரு ரிங்கிட்டைக் கூட அவர்கள் பெறவில்லை. வாக்குறுதி அளிக்கப்பட்ட இந்தத் தொகை அவர்களுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும். இதில் காரணங்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
ஏற்கெனவே கையொப்பமிடப்பட்டிருக்கும் அந்த 45 இயக்கங்களுக்கு நிதி வழங்கப்படாமல் இருக்கும் நிலையில் ஜூலை மாதத்தில் மித்ரா தலைவர் வெவ்வேறு அரசு சாரா இயக்கங்களுடன் இரண்டு முறை சந்திப்பு நடத்தியிருக்கிறார். இது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று டாக்டர் ஹலிமா வலியுறுத்தினார்.
அதேசமயம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, சிறுநீரக நோயாளிகளுக்கு சுத்திகரிப்புக்கான செலவுத் தொகை, தனியார் பாலர் பள்ளிகளுக்கான மானியம் ஆகியவையும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளன. இதில் சிறு நீரக நோயாளிகளின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. வாரத்தில் மூன்று நாட்கள் அவர்கள் சிறுநீரகச் சுத்திகரிப்புக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையும் அப்படியே கிடப்பில் உள்ளது. இவர்கள் பி40பிரிவைச் சேர்ந்த பரம ஏழைகள் என்பது மித்ராவுக்குத் தெரியாதா ?
அதேசமயத்தில் தனியார் தமிழ் பாலர்பள்ளிகளை நடத்திவரும் உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பது ஒரு நிபந்தனையாக இருக்கிறது. மித்ராவிடம் இருந்து ஒரு ரிங்கிட்கூட இன்னும்
கிடைக்காத பட்சத்தில் அவற்றை நடத்தும் உரிமையாளர்கள் கடன், உடன் வாங்கி தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்திய சமுதாயத்தின் மேன்மைக்கு வழங்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் இந்திய சமுதாயத்தைச் சென்றடைய வேண்டுமே தவிர நிதி அமைச்சுக்கு திரும்பக் கூடாது என்று டாக்டர் ஹலிமா வலியுறுத்தினார். இந்நாட்டில் வாழும் கிட்டத்தட்ட 26 லட்சம் இந்திய சமுதாயத்தின் நலன்களில் எதிர்க்கட்சியாகிய எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. இந்திய சமுதாயத்திற்கு ஏற்படும் இன்னல்களையும் ஏமாற்றங்களையும் பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். கண்டிப்பாக குரல் கொடுப்போம். இந்திய சமுதாயத்தின் இந்நிலை மிகுந்த வலியைத் தருகிறது. அண்மையில் பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுடினைச் சந்தித்த இந்திய அரசுசாரா இயக்கங்கள், பொதுநலவாதிகள் ஆகியோர் தங்களின் மனக்குறைகளையும் ஏமாற்றங்களையும் கொட்டித் தீர்த்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மிக எளிதாகச் செய்து முடிக்க வேண்டிய விஷயத்தை மித்ரா தலைவர் ஏன் சவ்வுபோன்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பிய டாக்டர் ஹலிமா நிதி வழங்கப்படுவதற்குரிய பத்திரத்தில் கையொப்பமிடும் அந்த மேஜிக் பேனா யார் கையில் இருக்கிறது என்றும் கேட்டார்.
மித்ரா மிக நேர்மையுடனும் அதன் திட்ட அமலாக்கங்கள் சிறந்த தாக்கத்தை தரக்கூடியதாகவும் இருப்பதற்கு அது ஓர் அரசாங்க ஏஜென்சியாக மாற்றப்பட வேண்டும். அரசாங்க ஏஜென்சி என்ற கட்டமைப்பின் கீழ் அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் செயல்களும் நாடாளுமன்ற மக்களவையின் பார்வைக்குள் அடங்கியிருக்கும் என்று கூறினார்




