இராகவன் கருப்பையா – நம் சமுதாயத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்ட ‘மித்ரா’ எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவின் செயல்பாடுகள் வெகுசன சாமானிய மக்களுக்கு இன்னமும் ஓர் எட்டாக்கனியாகவே உள்ளதைப் போல் தெரிகிறது.
அந்த அமைப்பு பல தடவை இடமாற்றமும் உருமாற்றமும் கண்டுள்ள போதிலும் முறையான நிர்வாகமின்றி தடுமாறிக் கொண்டிருப்பதால் அதனால் பயனடைய வேண்டிய மக்களில் நிறைய பேர், குறிப்பாக மாணவர்கள் கையேந்தி பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் தொடங்கி மொத்தம் 627 இந்து ஆலயங்களுக்கு 12.54 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுவதாக ‘மித்ரா’ செய்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சுமார் 9 மில்லியன் ரிங்கிட் கடந்த ஏப்ரல் மாதம் வரையில் கொடுத்து முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நிலைமை இவ்வாறு இருக்க, தனது மருத்துவக் கல்வியைத் தொடங்குவதற்கு இன்னும் 10 ஆயிரம் ரிங்கிட் தேவைப்படுவதாகவும், நன்கொடை செய்து உதவுமாறும் மாணவி ஒருவர் சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஒரு மருத்துவராக வேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவு என்றும், ம.இ.கா.விற்குச் சொந்தமான ‘ஏம்ஸ்ட்’ பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ள போதிலும் கல்வியைத் தொடங்குவதற்கு இன்னும் 10,000 ரிங்கிட் போதவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘பால் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக,’ மருத்துவராக வேண்டும் எனும் தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என தாம் அஞ்சுவதாக கண்ணீர் மல்க அந்த மாணவி பொது மக்களிடம் உதவிக் கோரினார்.
பொது மக்களிடமிருந்து சிறுகச் சிறுக திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு ஏன் இந்நிலை ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை.
அதே வேளையில் கோயில்களுக்கு மில்லியன் கணக்கான ரிங்கிட்டை வாரி இறைக்கும் ‘மித்ரா,’ இந்த மாணவியைப் போல பரிதவிப்போரை தூக்கிவிடுவதற்கான உதவித் திட்டங்களைக் கொண்டிருக்கவில்லையா, எனும் கேள்வியும் எழுகிறது.
சம்பந்தப்பட்ட அம்மாணவிக்கு பொது மக்களிடமிருந்து போதுமான நிதி கிடைத்ததா அல்லது உதவி கிடைக்காமல் அவருடைய கல்வி தடைபட்டு கனவு சிதைந்ததா தெரியவில்லை.
இந்நாட்டில் இதர சமூகங்களுக்கு நிகராக நம் சமுதாயமும் உயர வேண்டுமானால் கல்விதான் அதற்கான மூலப்பொருள், ஆயுதம், எல்லாமே, என்பது நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான். இதனைத்தான் நம் சமூகத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் காலங்காலமாக பறைசாற்றி வருகின்றனர்.
ஆனால், ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்மாட்டார்,’ எனும் நிலைப்பாட்டில் அல்லவா நாம் திண்டாடுகிறோம்! இந்தச் சூழலை என்னவென்று சொல்வது?
கடந்த 2018ஆம் ஆண்டுக்கு முன் ‘செடிக்’ என்று அழைக்கப்பட்ட இந்த உருமாற்றப் பிரிவு, அந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டு ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
அந்த சமயத்தில் ஒற்றுமைத்துறை அமைச்சராக வேதமூர்த்தி பொறுப்பேற்றிருந்தார். எனினும் 22 மாதங்களில் மகாதீர் ஆட்சியைக் கவிழ்த்து முஹிடின் யாசின் பிரதமரான போது ஹலிமா யாக்கோப் ஒற்றுமைத்துறை அமைச்சரானார்.
இந்த பெயர் மாற்றமோ, இடமாற்றமோ, அமைச்சர் மாற்றமோ, உதவித் தேவைப்படும் சாமானிய மக்களுக்கு எந்த வகையில் துணையாக இருந்தது என்று தெரியவில்லை.
ஆனால் குறுகிய காலத்தில் எம்.ஏ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைத்தின் விசாரணை வலைக்குள் அது மாட்டிக் கொண்டதுதான் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஏறத்தாழ 17 மாதங்களில் முஹிடின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக பொறுப்பேற்ற இஸ்மாய்ல் சப்ரி யாக்கோப், பிரதமர் இலாகாவின் கீழ் ‘மித்ரா’வைக் கொண்டு வந்தார்.
எனினும் 2022ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவியேற்ற அன்வார் இப்ராஹிம், தனது பி.கே.ஆர். கட்சியின் சுங்ஙை பூலோ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரமணனின் பொறுப்பில் சிறிது காலத்திற்கு அதனை ஒப்படைத்தார்.
ஆனால் ஏதோ காரணங்களுக்காக அந்தப் பொறுப்பை பிறகு ‘பத்து’ தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனுக்கு இடமாற்றம் செய்தார் பிரதமர்.
எனினும் இவ்வாண்டு ரமணனை மனிதவள அமைச்சராக பதவி நியமனம் செய்த அன்வார், ‘மித்ரா’வுக்கு கூடுதலாக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கி அந்த அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் அதனைக் கொண்டு வந்தார்.இப்படியாக, அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு, நிலையான இடமின்றி அனாதைக் குழந்தையைப் போல அங்குமிங்கும் அலைமோதும் ‘மித்ரா,’ எப்போது, எவ்வாறு நம் சமூகத்தைத் தூக்கி உயர்த்த உதவப் போகிறது என்று காலம்தான் பதில் சொல்லும்.
அதுவரையில், கையேந்தி நிற்கும் ஏழை மாணவர்களின் நிலைப்பாடு, ‘பழைய குருடி கதவைத் திறடி,’ போன்ற அவலம்தான்.

