Last Updated:
P&G நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சைலேஷ் ஜெஜுரிகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026 ஜனவரி 1 அன்று பொறுப்பேற்கிறார். P&G நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.
கூகுளின் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா, சேனலின் லீனா நாயர் மற்றும் ஆப்பிளின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி சபி கான் எனப் பல உலகளாவிய பெரும் நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர். இந்நிலையில் ஐஐஎம் முன்னாள் மாணவர் ஒருவர் தற்போது அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற உள்ளார். ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனத்தின் (P&G) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சைலேஷ் ஜெஜுரிகர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார். ஜனவரி 1, 2026 அன்று தனது புதிய பொறுப்பை ஏற்கிறார் சைலேஷ்.
58 வயதாகும் சைலேஷ் ஜெஜுரிகர், இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள ராமந்தபூரில் அமைந்துள்ள ஹைதராபாத் பொதுப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இந்தப் பள்ளியில் தான் மற்றொரு பிரபலமான முன்னாள் மாணவரும் படித்துள்ளார். அவர் வேறுயாருமல்ல. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தான். கல்லூரி படிப்பிற்காக மும்பைக்குச் சென்ற சைலேஷ், அங்குள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியில் பட்டப்படிப்பைப் பெற்றார். பின்னர் இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் உலகின் சிறந்த வணிகப் பள்ளிகளில் ஒன்றான இந்தூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM) சேர்ந்து தனது எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார்.
எம்பிஏ முடித்த உடனேயே, இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்புக்கான உதவி பிராண்ட் மேலாளராக P&G நிறுவனத்தில் 1989-ம் ஆண்டு சேர்ந்தார். ஆரம்பத்தில் இருந்தே இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த சைலேஷ், படிப்படியாக முன்னேறி தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கத் தயாராக உள்ளார். இவர் இந்தியா மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் சுகாதாரப் பராமரிப்பு, ஆடை பராமரிப்பு மற்றும் அழகு பராமரிப்பு என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
P&G நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சைலேஷ்
ஜெஜுரிகர், ஐந்து ஆண்டுகளுக்கு Otis Eleator Co நிறுவனத்தில் போர்ட் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர் 2019-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் உள்ள பி&ஜி கிளைக்கு மீண்டும் திரும்பினார். அன்றிலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறாமல் இங்கேயே பணியாற்றி வருகிறார். 2021 அக்டோபர் மாதம் ஓஹியோ அலுவலகத்தில் பணியாற்றிய போது, தலைமை செயல்பாட்டு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 2025-ம் ஆண்டு நிலவரப்படி சைலேஷின் சொத்து மதிப்பு குறைந்தது $8 மில்லியன் டாலர்கள் (ரூ. 697,640,000) இருக்கும் என ஊடகங்கள் கூறுகின்றன.
நிறுவனத்தின் வலுவான அடித்தளத்தை கட்டியெழுப்ப சைலேஷ் ஆற்றிய பணி, அவரது தொடர்ச்சியான தலைமையால் நிறுவனம் மேலும் பயனடையும் என்று P&G நிறுவனத்தின் போர்ட் தலைமை இயக்குநர் ஜோ ஜிமெனெஸ் கூறுகிறார்.
August 12, 2025 7:24 PM IST
மிகப்பெரிய அமெரிக்க உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்கும் இந்தியர்! யார் அவர்?


