புதுடெல்லி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
இங்கிலாந்துடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்கு உள்ளது. இதன்மூலம் 99 சதவீத பொருட்களை வரியே இல்லாமல் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, இது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தம். இதனால், விவசாயிகள், இளைஞர்கள், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை மற்றும் கனரக தொழில் துறை உட்பட அனைத்து துறைகளும் பயனடையும். குறிப்பாக இந்திய விவசாயிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
வேளாண்மை மற்றும் எத்தனால் உள்ளிட்ட உணர்வுபூர்வமான பொருட்களை பாதுகாக்கும். அதேவேளையில் இந்தியாவின் நலன்களை விட்டுக் கொடுக்காமல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.