பேருந்து புறக்கணிப்புப் போராட்டம் பற்றி விரிவாக படித்திருந்ததால், அந்த நாட்களில் பிரபலமாக அறியப்பட்ட தலைவர்களில் ஒருவரான மார்ட்டின் லூதர் கிங்குடன், லூயிஸ் மிஷாவ்வுக்கு எப்படிப்பட்ட தொடர்பு இருந்தது என்பதை அறிய விரும்பினேன். ஆனால், அவருடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே, ‘அவர் மால்கமின் ஆள்’ என்பதைப் புரிந்துகொண்டேன். அப்போதுதான் மின்னல் வெட்டியதைப் போல, அந்தச் சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.
“மிஷாவ், 1968-ம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். ஆனால் அதற்கு சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1958-ம் ஆண்டு, அவரை ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் உங்கள் பெயரும் அடிபட்டதே…” இப்படி கேட்டு வைத்தேன்.
“இவானிட்டி மிஷேல்… சில விஷயங்களை உங்களுக்கு தெளிவுபடுத்திட்டு, அந்த விஷயத்துக்கு வர்றேன். ஒரு குறிப்பிட்ட இலக்கோடு நான் புத்தகக் கடையை தொடங்கினேன். அது படிப்படியாக வளர்ந்து அமெரிக்காவின் கறுப்பர்களுக்கான மிகப் பெரிய புத்தகக் கடையாக அடையாளம் பெற்றது. என்னைப் பார்த்து மற்ற நகரங்களிலும் கறுப்பர்கள் புத்தகக் கடையைத் தொடங்கினாங்க. எங்களுடைய நோக்கமெல்லாம், கறுப்பர்களின் விடுதலைதான். கறுப்பர்களை அணிதிரட்டுதல், இயக்கத்திற்கு ஆட்சேர்ப்பு, ஆர்ப்பாட்டம், போராட்டம், கொள்கை வகுப்பு, கருத்தரங்கு – இவைகளைப் போல புத்தக விற்பனையையும் புரட்சியின் ஒரு பகுதியாகத்தான் நான் பார்த்தேன். அதில் வெற்றியும் அடைந்தோம். கறுப்பர்கள் தங்கள் உரிமைகளைப் பெற அணி திரள்வதில் ஆர்வம் காட்டினர். உத்வேகம் குறையாமல் கறுப்பர்களை ஊக்குவிக்க வாசிப்புத்தான் கறுப்பர்களுக்கு பெரிய உந்துசக்தியாக இருந்தது. அந்த வகையில் கறுப்பின புத்தகக் கடைகளே கறுப்பின விடுதலையில் முக்கிய பங்கு வகித்தன.

