Last Updated:
கர்நாடக மாநிலத்தில் மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 7-ந் தேதி காலை பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட ஒரு கையுடன் தெருநாய் ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மனித கையை மீட்டு விசாரணை நடத்தினர். யாரையோ கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். துண்டிக்கப்பட்ட கை இருந்த சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்
அப்போது 19 இடங்களில் துண்டிக்கப்பட்ட உடலின் பல்வேறு பாகங்களை ஒன்றன் பின் ஒன்றாக மீட்டனர். ஆனாலும் தலை மட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் மீட்கப்பட்ட உடல் உறுப்புகளை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ ஆய்வுக்குப் பின் அது ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் துமகூரு மாவட்டத்தில் மாயமான பெண்கள் குறித்த பட்டியலை தயாரித்தனர். அதில் கடந்த 3-ந்தேதி துமகூரு புறநகர் பெல்லாவியை சேர்ந்த 42 வயதான லட்சுமி தேவி என்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் அவரது கணவர் பசவராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 3-ந் தேதி தனது மனைவி ஹனுமந்தபுராவில் உள்ள தனது மகள் தேஜஸ்வியின் வீட்டிற்கு சென்றபோது மாயமானதாக அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை கொரட்டகெரே பகுதியில் கண்டுபிடித்தனர். பின்னர் மாயமான லட்சுமி தேவியின் கணவர் பசவராஜை அழைத்து வந்து காட்டிய போது அது தனது மனைவியின் தான் என்று அடையாளம் காட்டினார்.
இயைதடுத்து தனிப்படை அமைத்த போலீசார் லட்சுமி தேவியை கொலை செய்து 19 துண்டுகளாக வெட்டி வீசியது யார்? என்பது குறித்து அறிய தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு, கடந்த 3-ந்தேதி மாலை துமகூரு அனுமந்தபுராவில் இருந்து வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று செல்லும் காட்சி கிடைத்தது. அந்த காரின் முன்பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும், பின் பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும் இருந்ததால் அந்த கார் போலீசாரின் கவனத்தை ஈர்த்தது
இதையடுத்து அந்த காரின் உண்மையான எண்ணை கண்டுபிடித்தனர். அது உர்டிகெரே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. போலீசார் அவரது செல்போன் எண்ணை கைப்பற்றி அழைப்புகளை கண்காணிக்க முயன்றனர் ஆனால், லட்சுமிதேவி காணாமல் போன அன்றைய தினம் முதல் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் காரின் உரிமையாளர் சதிஸ் மற்றும் அவரது கூட்டாளி கிரண் ஆகியோரை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் லட்மிசு தேவியின் மருமகன் ராமச்சந்திரய்யா என்பவர் இந்த படுகொலையை திட்டம் போட்டு அரங்கேற்றிய திடுக்கிடும் தகவல் தெரியவந்தது கொலை செய்யப்பட்ட லட்சுமி தேவியின் மருமகன் ராமசந்திரய்யாவுக்கு 40 வயது. இவருக்கு ஏற்கெனவே ஒரு திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் 2-வதாக லட்சுமி தேவியின் 20 வயதான மகள் தேஜஸ்வியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 20 வயது வித்தியாசம் உள்ள நிலையில், அதை அடிக்கடி சுட்டிக்காட்டி குத்திக் காண்பித்துள்ளார் மாமியார் லட்சுமி தேவி ஒரு கட்டத்தில் ஆத்திரம் தலைக்கேறிய ராமச்சந்திரய்யா, மாமியாரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டுள்ளார். அதற்காக சதிஷ், கிரண் ஆகியோரை அழைத்து 4 லட்சம் ரூபாய் பேரம் பேசியிருக்கிறார். முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் மாமியாரை கடத்துவதற்கும் அவரை கொலை செய்த பின் உடலை மறைப்பதற்கும் என ஒரு சொகுசு காரை வாங்கி சதிஸ் பெயரில் பதிவு செய்திருக்கிறார்.
அதன்பின் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த மாமியாரை வழியிலேயே மடக்கி கடத்தியுள்ளனர். காரில் செல்லும்போதே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த அவர்கள், உடலை சதீசின் விவசாய தோட்டத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி 19 இடங்களில் வீசியதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து போலீசார் பல் டாக்டர் ராமசந்திரய்யா உள்பட 3 பேரையும் கைது செய்தனர். உடலைகண்டந்துண்டமாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசி விட்டால் கொலையைக் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தவர்களை போலீசார் துரிதமாக செயல்பட்டு பிடித்த சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
August 12, 2025 10:18 PM IST


