கோலாலம்பூர்:
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, மாமன்னர் ஆற்றிய உரையின் தலைப்பு மற்றும் உள்ளடக்கத்தைத் தவறாக மொழிபெயர்த்து வெளியிட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த நாளிதழ் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
தவறு நடந்ததை உணர்ந்தவுடன், நேற்று மதியம் 1.38 மணியளவில் அந்தச் செய்தியின் தலைப்பை மாற்றியமைத்துத் திருத்தம் செய்ததாக சைனா பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சு, மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) மற்றும் போலீார் மேற்கொள்ளும் அனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்நாளிதழ் உறுதி அளித்துள்ளது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் இது குறித்துக் கூறுகையில்: பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வப் புகாரின் அடிப்படையில், MCMC தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் இந்த விசாரணை நடைபெறுகிறது. பொதுமக்களிடையே குழப்பம், கவலை அல்லது அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் தகவல் தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவது இந்தப் பிரிவின் கீழ் குற்றமாகும்.
ஊடகங்கள் பொறுப்புடனும் துல்லியமாகவும் செய்திகளை வெளியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மலேசிய ஊடக மன்றம் (Malaysian Media Council) இத்தகைய விவகாரங்களில் தனது பங்களிப்பைச் சரியாக வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாமன்னரின் உரையானது நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியலமைப்புடன் தொடர்புடையது என்பதால், அதில் ஏற்படும் தவறுகள் மிகவும் தீவிரமாகக் கருதப்படுகின்றன.




