இருக்குநாளிலே திருநீலநக்கநாயனாரும் சிறுத்தொண்ட நாயனாரும் அவ்விடத்திற்கு வந்து அவர்களோடு இருந்தார்கள்.
சில தினஞ்சென்ற பின், பிள்ளையாரும் அப்பமூர்த்தியும் பிறதலங்களை வணங்க விரும்பிப் புறப்பட்டு, முருகநாயனாரை அங்கே இருக்கவும். திருநீலநக்கநாயனாரையும் சிறுத்தொண்ட நாயனாரையும் தங்கள் தங்கள் ஊருக்குச் செல்லவும் ஏவினார்கள். பிள்ளையார் அப்பமூர்த்தியை விட்டுப் பிரியாமல் முத்துச் சிவிகை பின் வர, வழிக்கொள்ளும் பொழுது, அப்பமூர்த்தி பிள்ளையாரை நோக்கி, “சிவபெருமான் தேவரீருக்கு அருளிச் செய்த இம்முத்திச் சிவிகை யின்மேலே எழுந்தருளும்” என்று சொல்ல; பிள்ளையார் “நீர் அடியார்களோடும் எங்கே முன் போவீரோ அங்கே நான் பின் வருவேன்” என்றார். அப்பமூர்த்தி “தேவரீர் அருளிச்செய்தபடியே செய்வேன்” என்று சொல்லிக் கொண்டு, அன்றுமுதல் அவருடன் செல்லுநாள் எல்லாம் அப்படியே செய்வாராகி நடந்து முன்னே அடியாரோடும் திருவம்பருக்குச் சென்றார். பிள்ளையார் பரமசிவனுடைய திருவருள்வழியே நிற்பாராகி, முத்துச்சிவிகையில் ஏறி, திருப்புகலூரைக் கடந்து சென்று, “அப்பமூர்த்தி எங்கே சென்றார்” என்று வினாவிப் போய், திருவம்பரை அடைந்து, மாகாளத்தில் இருக்கின்ற சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடி, அப்பமூர்த்தியோடும் அந்தத் திருப்பதியில் எழுந்தருளியிருந்தார். அங்கே கோச்செங்கட்சோழநாயனார் செய்த பெருந்திருக் கோயிலை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்து, அந்நாயனாரைச் சிறப்பித்து திருப்பதிகம் பாடினார். சிலநாட் சென்றபின், திருவம்பரை நீங்கி, அப்பமூர்த்தியோடு திருக்கடவூருக்குச் சமீபித்து, அங்குநின்று வந்து எதிர்கொண்டு வணங்கிய குங்குலியக் கலயநாயனார் முதலிய அடியார்களோடு, திருவீரட்டானத்திற் சென்று சுவாமிதரிசனஞ் செய்து, திருப்பதிகம் பாடி, அக்குங்குலியக் கலயநாயனார் வீட்டில் திருவமுது செய்து, திருக்கடவூர் மயானத்தையும் வணங்கிக் கொண்டிருந்தார்.
சிலநாளாயின பின் திருக்கடவூரை நீங்கி, திருவாக்கூர் திருமீயச்சூர், திருப்பாம்புரம் என்னுந்தலங்களை வணங்கிக் கொண்டு, திருவீழிமிழலையை அடைந்து, சுவாமி தரிசனஞ் செய்து திருப்பதிகம் பாடி, புறத்தணைந்து, அப்பமூர்த்தி ஒரு திருமடத்தை அடைய, தாம் வேறொரு திருமடத்திலே போயிருந்தார். அவ்விருவரும் பேணுபெருந்துறை, திலதைப்பதி என்னுந் தலங்களுக்கும் போய்த் தரிசனஞ் செய்துகொண்டு மீண்டும் திருவீழிமிழலையில் வந்திருந்தார்கள். (தொடரும்)
The post மானுடவியல் appeared first on Thinakaran.

