Last Updated:
மத்திய–மாநில உறவுகள் குறித்து தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற மு.க. ஸ்டாலினின் முயற்சிக்கு முழு ஆதரவை தருவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்தைப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மத்திய-மாநில உறவுகள் குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் முதல் பாகத்தை பெற்றுக் கொண்டதாக கூறி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மத்திய–மாநில உறவுகள் குறித்து தேசிய அளவிலான உரையாடலை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற மு.க. ஸ்டாலினின் முயற்சிக்கு முழு ஆதரவை தருவதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
கூட்டாட்சி என்பது வெறும் அரசியல் கோரிக்கை அல்ல என்று தெரிவித்துள்ள அவர், அது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என கூறியுள்ளார். பல ஆண்டுகளாக, நிதி மற்றும் சட்ட விவகாரங்களில் மத்திய அரசிடம் அதிகாரம் குவிக்கப்படுவது, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் வகுத்த சமநிலையைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாக சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாநிலங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்ற, அவற்றுக்கு உரிய அதிகாரமும், நிதி சுதந்திரமும் இருக்க வேண்டும் என சித்தராமையா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Thank you, Hon’ble Thiru. @Siddaramaiah avare, for your warm response to Part I of the Report of the High Level Committee on Union – State Relations constituted by the Government of Tamil Nadu.
I deeply appreciate your thoughtful endorsement of our initiative and your… https://t.co/XYDO9tydSE
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 3, 2026
அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து விவாதிக்கவும், கூட்டாட்சி தத்துவத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் வலுவான ஒரு தளத்தை மத்திய அரசு அமைத்துத் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாகப் பங்களிக்க கர்நாடகா தயாராக உள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியா போன்ற குடியரசு நாட்டில் அரசியலமைப்பு மூலம் மட்டுமே ஒற்றுமையை நிலைநிறுத்த முடியும் என்பதை சித்தராமையா சரியாக புரிந்துகொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.


