Last Updated:
Sports Pension | முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இதற்கு தகுதியான விளையாட்டுப் போட்டிகளாகும்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும். விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாள சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்றிதழ், வருமானசான்று, ஓய்வு பெற்றதற்கான விபரங்கள் ஆகிய ஆவணங்கள் இத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் 31.07.2025 மாலை 5.00 மணி வரை ஆகும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெரம்பலூர் அவர்களை 74017 03516 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
July 05, 2025 9:35 AM IST