Last Updated:
பீகார் மாநிலம் கயா முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால் தன்னுடைய இறுதி சடங்கை தானே நடத்தி உயிருடன் எழுந்த சம்பவம் ஊரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பீகாரில் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தது போல் நாடமாகடி தனக்குத் தானே இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மாணிக்கம் படத்தில் வரும் இந்த காட்சிகளைப் போன்ற ஒரு சம்பவத்தைத் தான் பீகாரில் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் செய்து பார்த்திருக்கிறார். தனது சாவுக்கு பின் மேல் உலகத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வதை விட, தனது சாவுக்கு பின் தன்னை சுற்றி என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. கண்களை மூடிக் கொண்டு என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பார்த்தவர், சிதையில் இருந்து உயிருடன் எழுந்த போது கிராமத்தினர் ஆடிப் போயினர். முன்னாள் விமானப்படை வீரர் அரங்கேற்றிய விநோத சம்பவத்தின் பின்னணி என்ன?
முகத்துக்கு நேராக நல்ல விதமாக பேசும் பலர், முதுகுக்கு பின்னாள் கழுவி ஊற்றும் பலரை பார்த்திருப்போம். அத்தகையவர்களை வாழ்நாள் முழுவதும் அறிந்து கொள்ளாமலேயே பலரும் உயிரை விட்டு விடுகின்றனர். ஆனால் தன்னிடம் உண்மையிலேயே யாரெல்லாம் நல்ல எண்ணத்துடன் பழகியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள அந்த 74 வயது முதியவருக்கு விருப்பம் எழுந்துள்ளது. பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால் என்ற முதியவருக்குத் தான் இந்த விநோதமான எண்ணம் எழுந்தது.
தான் இறந்து விட்டால் யார் யார் உண்மையில் அழுகிறார்கள்? யாரெல்லாம் தனது இறப்பை பயன்படுத்தி லாபம் அடையப் பார்க்கிறார்கள்? சொத்துக்காக யாரெல்லாம் அடித்துக் கொள்கிறார்கள்? தனது ஊர் மக்கள் தன் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்துள்ளனர் என்பதை சாவுக்கு முன்னதாக தெரிந்து கொள்ள ஒரு திட்டத்தை வகுத்தார். அதன்படி தனக்குத்தானே இறுதிச்சடங்கு நடத்தி நடப்பவற்றை எல்லாம் ஒரு சடலம் போல் கிடந்து நேரில் கண்டு தெரிந்து கொள்ளும் முடிவுக்கு வந்தார்.
தனது இறுதிச்சடங்கிற்கான நாளை தானே குறித்த அவர், அதற்கான வேலைகளில் இறங்கினர். சம்பவத்தன்று அதிகாலை முதலே ஊர் மக்கள் அனைவருக்கும் அந்த அதிர்ச்சி செய்தி காட்டுத் தீயாய் பரவியுள்ளது. முன்னாள் விமானப்படை வீரர் மோகன் லால் காலமானார் என்ற செய்தி கேட்டு ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அங்கு மோகன்லால் அலங்கரிக்கப்பட்ட பாடையில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
வந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்ட கதறி அழுதுள்ளனர். பலரும் அவர்மீது தாங்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தினர். இறுதி ஊர்வலம் தொடங்கியது. அந்த ஊருக்கு அவரே கட்டிக் கொடுத்த தகன மேடைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது 2 மகன்களும், ஒரு மகளும் தங்களது இறுதிச் சடங்குகளை செய்தனர். மோகன்லாலின் உடல் சிதையின் மேல் வைக்கப்பட்டது.
கடைசியாக சிதைக்கு தீ வைக்கும்போது தான் அந்த திடுக்கிடும் சம்பவம் அரங்கேறியது. சிதையிலிருந்த மோகன்லாலின் உடல் லேசாக அசைய ஆரம்பித்து. அடுத்த சில நொடிகளில் அவர் சிதையின் மேல் எழுந்து அமர்ந்தார். சுற்றி நின்ற ஊர்மக்கள் அனைவரும் வாயடைத்து போயினர். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்த போய் நின்ற போது, அனைத்து உண்மைகளையும் கூற ஆரம்பித்தார் மோகன்லால். அவரது திட்டத்தை தெரிந்து ஊர் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்ட போதும், அவர் மீது கொண்ட மரியாதையால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பின்னர் முன்கூட்டியே செய்து வைத்திருந்த உருவபொம்மை ஒன்றை எடுத்து சிதையில் வைத்து அதற்கு தானே எரியூட்டினார் மோகன் லால். பின்னர் ஊர் மக்களுக்கெல்லாம் தனது வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்த விருந்துக்கு அழைத்துச் சென்றார். முன்னாள் விமானப்படை வீரர் தனது இறுதி சடங்கை தானே நிகழ்த்திய சம்பவம் பீகாரில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
October 15, 2025 7:16 PM IST


