Last Updated:
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரை எம்பி சு வெங்கடேசன் உள்பட 8 எம்பிக்கள் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இருந்து முழுவதுமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா சீனா இடையிலான உறவு குறித்த முன்னாள் ராணுவத் தளபதி எம்எம் நரவனேவின் கட்டுரையை குறிப்பிட்டு பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதையடுத்து இந்தியா, சீனா உறவு பற்றி பேசுவதை தவிர்க்குமாறு ராகுல் காந்திக்கு மக்களவை சபாநாயகர் அறிவுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா கூட்டணி எம்பிக்கள், கடும் அமளியில் ஈடுபட்டும், காகிதங்களை கிழித்து சபாநாயகர் மீதும் வீசினர்.
இதனையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக 8 எம்பிக்களை இடை நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசன், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வாரிங், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், மற்றும் டீன் குரியகோஸ் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இடை நீக்கம் செய்யப்பட்ட மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதை எதிர்த்து போராடிய நிலைில், தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அதேபோல காரணங்களே இல்லாமல் 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை புரிந்து கொள்ள முடியவில்லை என திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
Parliament Budget Session : மாணிக்கம் தாகூர், சு வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் பட்ஜெட் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்


