Last Updated:
சில்லறை சந்தையில் ஒரு பழம் அதன் அளவைப் பொறுத்து ரூ.5, ரூ.8, அதிகபட்சமாக ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்திரை மாதம் தொடங்கும் முன்பே கடும் வெப்பம் நிலவிய நிலையில், விழுப்புரம் பகுதியில் எலுமிச்சை பழத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
மாவட்டம் முழுவதும் காலை 10 மணி முதலே வெயில் கடுமையாகத் துவங்கி மாலை 5 மணி வரை நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்திலும் வெப்பம் குறையாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
உடல் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் எளிதாகவும் குறைந்த செலவிலும் கிடைக்கும் எலுமிச்சைச் சாறு முக்கிய இடம் பிடித்துள்ளது. வீடுகள் மற்றும் கடைகளில் பயன்பாடு அதிகரித்ததால் சந்தையில் எலுமிச்சைக்கு கடும் தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு எலுமிச்சை ரூ.2க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சில்லறை சந்தையில் ஒரு பழம் அதன் அளவைப் பொறுத்து ரூ.5, ரூ.8, அதிகபட்சமாக ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. மொத்த சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.250 வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து எம்.ஜி. ரோடு சந்தை வியாபாரி ஒருவர் கூறுகையில், “திருச்சியிலிருந்து எலுமிச்சைப் பழங்களை மொத்தமாக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கிறோம். கடந்த மாதங்களில் விற்பனை மந்தமாக இருந்தது. தற்போது வெயிலின் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர். விலை உயர்வு காரணமாக விற்பனைத் தொகையும் அதிகரித்துள்ளது,” என்றார். விலை உயர்ந்திருந்தாலும், உடல்நலனை கருத்தில் கொண்டு செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து இயற்கையான எலுமிச்சைச் சாற்றையே பொதுமக்கள் விரும்பி வாங்கி வருவது விழுப்புரம் சந்தையில் காணப்படுகிறது.

