Last Updated:
குர்கிராமில் ரூ.100 கோடி மதிப்புள்ள வீடுகளில் மழைநீர் புகுந்த வீடியோ வைரலாகி, நகரின் மோசமான வடிகால் அமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.
நாட்டின் மில்லினியம் சிட்டி என்று அழைக்கப்படும் குர்கானில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் மழைநீர் புகுந்த அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நகரின் வடிகால் அமைப்பு குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. வட இந்தியாவில் டெல்லி, குருகிராம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குருகிராம் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குருகிராமில் உள்ள உயரடுக்கினரின் குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. 4 மணி நேர மழைக்கு பிறகு குருகிராமில் வெள்ளம் சூழ்ந்தது. குருகிராமில் உள்ள பெண் ஒருவர் தனது ஆடம்பரமான வீடு வெள்ளத்தில் மூழ்கியிருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிட்டவுடன் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சாஞ்சி அரோரா என்ற பெண் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வீடுகள் விற்கப்படும் குருகிராமில் DLF கேமிலியாஸ் போன்ற ஆடம்பரமான கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற கோல்ஃப் கோர்ஸ் சாலையில் தனது வீடு அமைந்திருந்தாலும், அது வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதாக அவர் கூறினார்.
வைரலாகும் வீடியோவில் முழங்கால் அளவு தண்ணீர் இருக்கும் வீட்டிற்கு வெளியே அவர் காரில் இருந்து இறங்குவதை வீடியோவில் காணலாம். மேலும் வீட்டின் உள்ளே இருக்கும் ஃபர்னிச்சர், காலணிகள், குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள் போன்றவை தண்ணீரில் மிதப்பது போன்ற காட்சிகளை காணலாம்.
இது தொடர்பாக சாஞ்சி அரோரா என்ற பெண் தனது பதிவில், நேற்று இரவு நடந்த சம்பவம் என்னை முழுவதுமாக உடைத்து விட்டது. நேற்றைய வானிலை மிகவும் மோசமாக இருந்தது, சுமார் 4 மணி நேரம் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் குருகிராமின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இந்நிலையில் DLF கேமிலியாஸ் போன்ற ஆடம்பரமான உயரமான கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற கோல்ஃப் கோர்ஸ் சாலைக்கு அருகில் நான் வசிக்கிறேன், அங்கு வீடுகள் ரூ.100 கோடிக்கு மேல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன, ஆனால் இங்கேயும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் வேலை முடிந்து திரும்பும் போது, எனது கார் பாதி தண்ணீரில் மூழ்கியிருந்தது, ஆனால் உண்மையில் நான் உடைத்தது என் வீட்டிற்குள் இருந்த நிலை தான். இது எனது வீடு, நான் மிகுந்த அன்புடனும் கடின உழைப்புடனும் அலங்கரித்த வீடு. தரையில் வைக்கப்பட்டிருந்த ஃபர்னிச்சர் போன்றவை தண்ணீரில் மிதந்து, ஈரமாகி சேதமடைந்தன என்று கூறியுள்ளார். மேலும், என்னிடம் வார்த்தைகள் இல்லை. வெறும் வலி. வெறும் அவநம்பிக்கை. இது வெறும் வெள்ளத்தால் ஏற்பட்ட எனது பொருட்களின் இழப்பு மட்டுமல்ல, எனது உணர்ச்சியின் இழப்பு. இது உண்மையானது. என்றும் அவர் தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்டார்.
சமீபத்திய அப்டேட்டின் படி, இந்த வைரல் வீடியோ 21 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு, ஆயிரக்கணக்கான கருத்துகளைப் பெற்றது. இவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் நிர்வாகத்தின் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு சிலர் அந்த பெண்ணை நினைத்து பரிதாபப்படுகிறார்கள். மேலும் சிலர் டெல்லி-NCRஇல் மோசமான வடிகால் அமைப்பு இருப்பதாக ஏராளமான மக்கள் அதிகாரிகளை விமர்சித்து வருகின்றனர். அதில் ஒரு யூசர், சிந்து சமவெளி நாகரிகத்திலும் கூட இதை விட சிறந்த வடிகால் அமைப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மற்றொரு யூசர், ரூ.10 கோடி அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் வெளிநாடு சென்று, அங்கு வரி செலுத்தி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புடன் வாழ்க்கையை வாழுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
July 15, 2025 6:47 AM IST


