Last Updated:
Today Flower Price: கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையான குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. மற்ற மாவட்ட மலர் சந்தைகளை ஒப்பிடுகையில் தோவாளை மலர்ச் சந்தையில் பூக்களின் விலை குறைவாக இருக்கும். இங்கு பூக்களின் வரவு, தேவை, விற்பனையைப் பொறுத்து விலைகளில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்.
பொதுவாக விசேஷ தினங்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரிப்பது வழக்கம். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகரித்து உள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி மல்லிகை பூ – 4000, பிச்சிப்பூ – 2000, அரளி பூ – 400, வாடா மல்லி – 100, கேந்தி – 75, சம்பங்கி – 80, முல்லை – 1600, ரோஸ் – 150, ஸ்டம்ப் ரோஸ் – 400, துளசி – 50, தாமரை – 15, மரிக்கொழுந்து – 250, செவ்வந்தி – 200-க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து தோவாளை மலர் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், தமிழ்நாடு முழுவதும் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலையில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாகப் பூக்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. மேலும் பல இடங்களில் பூக்களைப் பறிக்க முடியாத சூழலும் நிலவி வருகிறது.
தற்போது ஐயப்பன் கோவில் சீசன், கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற சுப தினங்களால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. பூக்களின் தேவைக்கேற்ப பூக்களின் வரத்துக் குறைவு என்பதால் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விலையேற்றம் தை மாதம் வரை நீடிக்கலாம் எனத் தெரிவித்தனர்.
Kanniyakumari,Tamil Nadu

