மலேசிய முன்னாள் ஊழியர் தமிழ்நாட்டில் புதிதாக திறந்துள்ள “தோம்யம் மலேசியா” (Tomyam Malaysia) என்ற உணவகம் மலேசியர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கனி என்ற அவர் குறிப்பிட்ட காலம் மலேசியாவில் பணியாற்றினார். அந்த காலகட்டத்தில், மலேசிய உணவின் மீதும் சுவையின் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் “தோம்யம் மலேசியா”
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அவர், மலேசிய சுவையை பிரிய மனசில்லாமல் நாடு திரும்பியதும் அதை தன்னோடு கொண்டு வர முடிவு செய்தார்.
அதன் வெளிப்பாடாக பிறந்தது தான் ராமநாதபுரம், பனைக்குளம் பகுதியில் அமைந்துள்ள இந்த “தோம்யம் மலேசியா” (Tomyam Malaysia) உணவகம்.
கடந்த ஜூன் மாதம் வேலைகள் தொடங்கப்பட்டு, ஜூலை மாத தொடக்கத்தில் உணவகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.
மலேசியர்கள் அறிந்த மற்றும் விரும்பி உண்ணும் அனைத்து உணவுகளும் அங்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து மலேசிய உணவுகளும் கிடைக்கும்
தோம்யம் மட்டும் அங்கு கிடைக்கும் என்று நினைத்துவிட வேண்டாம், அதோடு சேர்த்து நாசி லெமாக், நாசி அயம், மீ சோடோங், ரோஜாக், சடே மற்றும் ரொட்டி கனாய் போன்ற உணவு வகைகளும் அங்கு கிடைக்கும்.
அந்த உணவகம் உங்களை மீண்டும் மலேசியாவிற்கே கொண்டு செல்லும் என்று அதன் நிறுவனர் கனி கூறுகிறார். மேலும் அவை அனைத்தும் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியர்கள் கொடுத்த பெரும் ஆதரவுக்கு சமீபத்திய காணொளி ஒன்றில் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பலர் அவரது முயற்சிகளைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் அமைந்துள்ள உணவகத்தை சென்று பார்க்குமாறு பிறரையும் ஊக்குவித்துள்ளனர்.