ஜோகூர் பாரு:
மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அதிபரின் அழைப்பை ஏற்று, இன்று முதல் மூன்று நாள் சிறப்புப் பயணத்தைத் தொடங்கினார்.
நாட்டின் மாமன்னராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
அமீரக அதிபர் ஷேக் முகமட் பின் சயீட் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Zayed Al Nahyan) விடுத்த தனிப்பட்ட அழைப்பின் பேரில் இந்தப் பயணம் அமைகிறது. இது இன்று (டிசம்பர் 22) தொடங்கிய இந்தப் பயணம், வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று, மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை 9:00 மணியளவில் ஜோகூர், சேனாய் சர்வதேச அனைத்துலக நிலையத்திலுள்ள அரச விமானத் தளத்திலிருந்து (Royal Hangar) மாமன்னர் புறப்பட்டார்.
விமான நிலையத்தில் ஜோகூர் மாநிலச் செயலாளர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான், இஸ்தானா நெகாரா (தேசிய அரண்மனை) அதிகாரி டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் அஸ்மி ரோஹானி மற்றும் ஜோகூர் அரண்மனை அதிகாரி கர்னல் (ஓய்வு) டத்தோ முகமது பேராங் மூசா ஆகியோர் மாமன்னரை வழியனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தப்பயணம் மலேசியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதையும், புதிய பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.




