சுங்கை பூலோ | மார்ச் 25, 2026
பிரிட்டனில் அரசியல் தஞ்சம் (Political Asylum) பெறுவதற்காக, தொழிலதிபர் விக்டர் சின் மலேசிய அரசு மற்றும் பி.கே.ஆர் (PKR) கட்சி மீது அவதூறு பரப்பி வருவதாகச் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
விக்டர் சின் தன்னை ஒரு பாதிக்கப்பட்டவராகக் காட்டி, லண்டனில் அரசியல் தஞ்சம் பெற முயல்கிறார். இதற்காகவே அவர் பி.கே.ஆர் கட்சி மற்றும் மலேசிய அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கிறார் என்று, இன்று சுங்கை பூலோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரமணன் கூறினார்.
மேலும் விக்டர் சின், தன் மீதான பிடியிலிருந்து தப்பிக்க அவர் ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), மத்திய வங்கி (BNM) மற்றும் போலீசார் மீது வீணான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.
பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தன்னிடம் 10 மில்லியன் ரிங்கிட் கேட்டதாகவும், அதில் 9.5 மில்லியன் ரிங்கிட்டை தான் கொடுத்துவிட்டதாகவும் விக்டர் சின் அண்மையில் 40 பக்க ஆவணம் ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார். இது குறித்துப் பேசிய ரமணன், “உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதனைச் சமர்ப்பியுங்கள். இது விளையாடும் இடமல்ல. உங்கள் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த போலீஸில் புகார் செய்யுமாறு பி.கே.ஆர் உறுப்பினர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் கூறினார்.
விக்டர் சின் ஒரு ‘கார்ப்பரேட் மாஃபியா’ என்று அழைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய ரமணன், “மாஃபியாக்களுக்குக் கூட சில கொள்கைகள் இருக்கும். ஆனால் இவருக்கு இரக்கமே கிடையாது. பங்குச் சந்தை கையாடல் மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்பைச் சூறையாடிய இவர் ஒரு ‘கார்ப்பரேட் பேய்’ (Corporate Devil),” என்று கடுமையாகச் சாடினார்.
வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு சுருட்டு பிடித்துக்கொண்டு வீணான குற்றச்சாட்டுகளைக் கூற வேண்டாம் என விக்டர் சின்னிற்கு ரமணன் சவால் விடுத்தார். “நீங்கள் குற்றமற்றவர் என்றால் மலேசியாவுக்குத் திரும்பி வந்து விசாரணையை எதிர்கொள்ளுங்கள். சட்டம் தன் கடமையைச் செய்யும், அஞ்சத் தேவையில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.




