கோலாலம்பூர் | மார்ச் 26, 2026
மலேசியா மற்றும் புரூணை நாட்டு எல்லைப் பகுதியில் எல்லை நிர்ணயம் மற்றும் நில அளவைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடந்த மார்ச் 17 முதல் மாயமான மலேசிய நில அளவைத் துறை (JUPEM) அதிகாரி, ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த அதிகாரி டோனிசியஸ் கேப்ரியல் கோ (Donysius Gabriel Goh, 36) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சரவாக், மிரி பிராந்திய நிலப்பரப்பு அலுவலகத்தில் பொது உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த வாரம் லாவாஸ் (Lawas) பகுதியில் உள்ள உலு தெம்புரோங் ஆற்றில் தனது ஐந்து சக ஊழியர்களுடன் கடக்க முயன்றபோது, பலத்த நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
அவர் மாயமான இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றில் நேற்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குருப், டோனிசியஸின் மறைவிற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். “நாட்டின் எல்லைகளைத் துல்லியமாக அளவிடும் கடினமான பணியில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு எப்போதும் நினைவு கூறப்படும்,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.
இந்தத் தேடுதல் வேட்டையில் புரூணை அரசு வழங்கிய மேலான ஒத்துழைப்பிற்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். புரூணை தரைப்படை, கூர்க்கா படைப்பிரிவு மற்றும் ராயல் புரூணை விமானப்படை ஆகியவை இந்த மீட்புப் பணியில் முக்கியப் பங்காற்றின. மேலும் அடர்ந்த மற்றும் செல்வதற்கு கடினமான காட்டுப் பகுதியிலிருந்து உடலை மீட்டெடுக்கப் புரூணை விமானப்படை ஹெலிகாப்டரை வழங்கியது என்றார்.
தற்போது உயிரிழந்த JUPEM அதிகாரியின் உடல் புரூணையில் உள்ள ரிபாஸ் (RIPAS) மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்த டோனிசியஸிற்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சகம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான ஆவணப் பணிகள் மற்றும் அடையாளச் சோதனைகள் முடிந்தவுடன், அவரது உடல் மலேசியாவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




