கோலாலம்பூர் | மார்ச் 28, 2026
மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் கோடை வெயில் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பெர்லிஸ் முழுமையாகவும், கெடா மற்றும் பேராக் மாநிலங்களின் சில மாவட்டங்களிலும் ‘நிலை 2’ (Level 2) வெப்ப அலை பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில், நிலை 2 (வெப்ப அலை): பெர்லிஸ் மாநிலம் முழுவதும், கெடாவில் உள்ள பாலிங், சிக், பெண்டாங், போக்கோக் செனா, கோத்தா ஸ்டார் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் பேராக் மாநிலத்தின் உலு பேராக் பகுதி ஆகிய பகுதிகளில் நிலவும்.
அதேநேரம் கெடாவின் லங்காவி, குபாங் பாசு உள்ளிட்ட பகுதிகள், பேராக்கின் கிந்தா, கோலாகங்சார், பினாங்கு, பகாங்கின் ஜெராண்டுட் மற்றும் சரவாக்கின் லுபோக் அந்து ஆகிய இடங்கள் ‘நிலை 1’ எச்சரிக்கையின் கீழ் உள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின்படி, ஒரு பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களுக்குத் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 37°C முதல் 40°C வரை பதிவானால் அது ‘நிலை 2’ வெப்ப அலையாகக் கருதப்படுகிறது. அதேபோல், 35°C முதல் 37°C வரை வெப்பநிலை நீடித்தால் அது ‘நிலை 1’ (எச்சரிக்கை) என்று அழைக்கப்படுகிறது.
கடும் வெப்பம் காரணமாக உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்: தாகம் எடுக்காவிட்டாலும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டாம், நண்பகல் நேரங்களில் தேவையற்ற வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளவும், வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பியைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.




