கோலாலம்பூர்:
நாடு முழுவதும் கண்ட இடங்களில் குப்பை கொட்டும் சிறு குற்றங்களுக்காக இதுவரை 14,807 அறிவிப்பு நோட்டீஸ்கள் (Notices) வழங்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை (KPKT) அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர், திடக் கழிவு மற்றும் பொதுத் தூய்மை மேலாண்மைச் சட்டம் 2007 (சட்டம் 672)-ஐ ஏற்றுக்கொண்ட மாநிலங்களில் மட்டும் கடந்த திங்கள் வரை 548 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில் 419 நபர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட சமூக சேவை உத்தரவை (Community Service Orders – CSO) முழுமையாகச் செய்து முடித்துள்ளனர்.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இந்த அமலாக்க நடவடிக்கையின் மூலம் 15 அமர்வுகளில் மொத்தம் 2,279 மணிநேர சமூக சேவை செய்யப்பட்டுள்ளது. இது பொது இடங்களில் குப்பை கொட்டுவது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.
சட்டம் 672-ஐ இன்னும் நடைமுறைப்படுத்தாத பினாங்கு, பேராக், சிலாங்கூர், கிளந்தான், திரெங்கானு மற்றும் சபா, சரவாக் ஆகிய மாநிலங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளாட்சிச் சட்டங்களில் (Act 133 & Act 171) திருத்தங்கள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் தூய்மையைப் பேணி காக்கும் தூய்மைப் பணியாளர்கள் மலேசியாவின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களுக்குத் தகுந்த அங்கீகாரமும் கண்ணியமான ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
The post மலேசியாவில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை: 15,000-க்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் விநியோகம்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

