கோலாலம்பூர்:
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பில் (UNHCR) பதிவு செய்யப்பட்டுள்ள அகதிகளில் பாதியளவினர் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என மலேசியக் குடிநுழைவுத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
UNHCR இன், தகவலின்படி மலேசியாவில் சுமார் 200,000 அகதிகள் பதிவாகியுள்ள நிலையில், அவர்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிய அகதிகள் ஆவணப் பதிவுத் திட்டத்தின் (DPP) மூலம் சரிபார்க்கப்பட்டு வருவதாகக் குடிநுழைவுத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவுத் துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாட்டில் உள்ள அகதிகளின் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதே தங்களின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்டார். UNHCR அட்டைகளைப் பெற்றிருப்பவர்களில் பெரும்பான்மையானோர் மியன்மார் பிரஜைகள் என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், தடுப்பு முகாம்களில் உள்ள மியன்மார் நாட்டவர்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னதாக, மலேசியத் தடுப்பு முகாம்களில் உள்ள 5,000 மியன்மார் நாட்டவர்களை முதற்கட்டமாக நாடு கடத்தும் திட்டத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 29-ஆம் திகதி 1,476 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தொடர்பாகப் பேசிய தலைமை இயக்குநர், “5,000 பேரை அனுப்புவதோடு இந்த நடவடிக்கை முடிந்துவிடாது; குறிப்பிட்ட இலக்கு எதுவுமின்றித் தொடர்ச்சியாக இ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முடிந்தவரை அனைவரையும் அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதே எங்களின் இலக்கு” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.



