கோலாலம்பூர்:
வர்த்தகத் துறையின் அசுர வளர்ச்சி மலேசியாவைத் தென்கிழக்கு ஆசியாவின் வலுவான பொருளாதார சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது என்று அனைத்துலக நிதியகத்தின் (IMF) பாராட்டை மலேசிய பெற்றுள்ளது.
உலகளாவிய வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியிலும் உள்நாட்டு பயனீடு மற்றும் முதலீடு காரணமாக மலேசியா நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளது என்று அந்த உலக அமைப்பு இன்று புகழாரம் சூட்டிள்ளது.
ஐஎம்எஃப் மற்றும் மலேசியப் புள்ளிவிவரத் துறையின் (DOSM) தரவுகளின்படி, மலேசியாவின் பொருளாதாரப் போக்கு பின்வருமாறு கணிக்கப்பட்டுள்ளது:
2025 வளர்ச்சி: 4.6% (ஆரோக்கியமான வளர்ச்சி)
2026 வளர்ச்சி: 4.3% (உலகளாவிய சூழலால் சற்றே குறையக்கூடும், ஆனால் நிலையானது)
மலேசியாவின் வெளிநாட்டு வர்த்தகம் இந்த ஆண்டு வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, அதாவது ஜனவரி முதல் நவம்பர் 2025 வரையிலான காலப்பகுதியில் மலேசியாவின் மொத்த வர்த்தகம் RM 2.8 டிரில்லியன் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.8% அதிகமாகும்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்த வர்த்தகம் RM 263.8 பில்லியனாக உயர்ந்துள்ளது (11.1% வளர்ச்சி).
மின்னியல் மற்றும் மின்னணு (E&E) பொருட்களுக்கான உலகளாவிய தேவை அதிகரித்ததே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.




