( ரெ.மாலினி)
மலாக்கா மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ உத்தமா அப்துல் ரஃப் யூசோப் தலைமையிலான மாநில அரசு நிலையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதாக, முதல்வரின் அரசியல் செயலாளர் டத்தோ அப்துல் ஹகீம் அப்துல் வாஹிட் தெரிவித்துள்ளார்.
மாநில நிர்வாகம் தற்போது முழுமையாக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்தி வருவதால், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (எக்ஸ்கோ) அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என யாரும் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை என அவர் வலியுறுத்தினார்.
மேலும், மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா மாநில நிர்வாகக் குழு உறுப்பினருமான டத்தோ டாக்டர் அக்மல் சாலே தமது பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றி வருவதால், அவர் பதவி விலக வேண்டும் என எந்த அரசியல் கட்சியும் கோரிக்கை விடுக்க வேண்டாம் என்றும் கூறினார்.
அடிப்படையற்ற அரசியல் ஊகங்களும் அழுத்தங்களும் நிர்வாகத்தின் கவனத்தைச் சிதைக்கும் மட்டுமே என்றும், மாநில அரசின் நிலைத்தன்மைக்கும் மக்களுக்கும் எந்த நன்மையும் தராது என்றும் அவர் தெரிவித்தார்.
மலாக்கா மாநில அரசு தொடர்ந்து பொறுப்புடனும் செயல்திறனுடனும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிர்வகிக்க உறுதியாக இருப்பதாகவும், அரசியல் சர்ச்சைகளால் பாதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.




