(ரெ.மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநில சட்டமன்றம் நாளை செப்டம்பர் 23ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக கலைக்கப்படும் என மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யுசோ அறிவித்துள்ளார்.
இன்று ஸ்ரீ நெகிரியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனைத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த மலாக்கா சட்டமன்றக் கலைப்பு தொடர்பான எதிர்பார்ப்புக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாநிலத் தேர்தல் ( நடத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் இது வழிவகுத்துள்ளது.
அப்துல் ரவூப் கூறுகையில், மலாக்கா மாநில அரசியலமைப்புச் சட்டம் 1957-ன் விதிகளுக்கு அமைவாக சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
“நான் மலாக்கா மாநில ஆளுநர் துன் டத்தோ ஸ்ரீ உத்தாமா டாக்டர் முகமட் அலி முகமட் ருஸ்தாமைச் சந்தித்து, மலாக்கா சட்டமன்றத்தின் நிலை குறித்து தெரிவித்ததுடன், சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான அவரின் ஒப்புதலையும் கோரினேன்.
“மலாக்கா சட்டமன்றத்தை நாளை, செப்டம்பர் 23, 2026 முதல் கலைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.

மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இதில் தேர்தல் ஆணை வெளியிடப்படும் தேதி, வேட்புமனு தாக்கல் நாள் மற்றும் வாக்களிப்பு நாள் உள்ளிட்டவை சட்ட விதிகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.
மலாக்கா மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 28 தொகுதிகள் உள்ளன. தற்போதைய மாநில அரசின் பதவிக்காலம் முன்கூட்டியே சட்டமன்றம் கலைக்கப்படாவிட்டால், வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
தற்போது சட்டமன்றம் கலைக்கப்படுவதால், மலாக்கா மாநிலத்தில் அடுத்த கட்டமாக மாநிலத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன.
The post மலாக்கா சட்டமன்றம் நாளை கலைப்பு; அப்துல் ரவூப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

