Last Updated:
அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நுகர்வோருக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச சந்தை அழுத்தங்கள் இருந்தபோதிலும், உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட அரசு நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தை விட இந்தியாவில் எல்பிஜி விலை குறைவாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளத்துடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நுகர்வோருக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், இந்தியாவில் சமையல் எரிவாயு விலை, கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இது மலிவாக கிடைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு நவம்பர் 1 நிலவரப்படி, டெல்லியில் 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகளுக்கு ரூ.553ஆகவும், பிற சாதாரண நுகர்வோருக்கு ரூ.853ஆகவும் இருப்பதாக அமைச்சர் சமர்ப்பித்த தரவுகள் தெரிவிக்கின்றன. அண்டை நாடுகளுடன் இதனை ஒப்பிட்டால், பாகிஸ்தானின் லாகூரில் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.902.20ஆகவும், இலங்கையின் கொழும்புவில் ரூ.1,227.58ஆகவும், நேபாளத்தின் காத்மாண்டுவில் ரூ.1,205.72ஆகவும் உள்ளது. இதன் மூலம், பிராந்திய அளவில் இந்தியாவில்தான் எல்பிஜி விலை மிகவும் குறைவாக இருப்பது உறுதியாகிறது.
இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 60 சதவீதம், இறக்குமதியிலேயே நிறைவேற்றப்படுவதாக அமைச்சர் விளக்கினார். இதனால், உள்நாட்டு எல்பிஜி விலைகள் சர்வதேச சந்தை விலைகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளன. எல்பிஜி விலை நிர்ணயத்திற்கான சர்வதேச அளவுகோலாக கருதப்படும் சவுதி சிபி விலை, 2023 ஜூலையில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 385 அமெரிக்க டாலராக இருந்தது, இது 2025 நவம்பரில் 466 டாலராக உயர்ந்து, சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், இதே காலகட்டத்தில் இந்தியாவில் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1,103-லிருந்து ரூ.853ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இது சுமார் 22 சதவீத விலைக் குறைப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் சமையல் எரிவாயு எளிதாக கிடைக்கச் செய்வதற்காக எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) நாடு முழுவதும் பரவலான கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 2016 ஏப்ரல் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை மொத்தம் 8,017 புதிய எல்பிஜி விநியோகஸ்தர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 7,420 மையங்கள், அதாவது சுமார் 93 சதவீதம், கிராமப்புற மற்றும் ஊரக மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் செயல்படுகின்றன.
December 13, 2025 8:39 PM IST
மற்ற நாடுகளைவிட இந்தியாவில் எல்பிஜி விலை குறைவு…! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்…


