News by Dhilli Rani
தெலுக் இந்தான்,
காலப்போக்கில் மறைந்து வரும் இந்தியர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம் மற்றும் இசை ஆகியவற்றை தொடர்ந்து பேணிக் காத்திடுவது மிக மிக அவசியமாகும் என சமூகநல மேம்பாட்டுக் கழகம் மற்றும் மலேசிய இலக்கவியல் முன்னேற்ற நடவடிக்கைக் கழகத்தின் தலைவர் சிவபாலன் முனியாண்டி வலியுறுத்தினார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு, கீழ்ப்பேராக் சமூகநல இயக்கம், மலேசிய இலக்கவியல் முன்னேற்றக் கழகம் மற்றும் பேராக் மாநில கலை மற்றும் கலாச்சார இலாகாவின் ஒத்துழைப்புடன், தெலுக் இந்தான் ஜாலான் மஹாராஜாலேலாவில் அமைந்துள்ள இந்தியர்களுக்குச் சொந்தமான A2Z மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் கலை, கலாச்சார விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி என மொழியால் வேறுபட்டாலும், நாம் அனைவரும் ஒரே இந்தியர்களாகவே இருக்கிறோம். நம் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும், இந்தியர்களின் பாரம்பரிய கலை மற்றும் கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் நோக்கத்துடனும், தமிழ், தெலுங்கு, வைசாகி, இந்துப் புத்தாண்டு போன்ற முக்கிய நாட்களையொட்டி இந்நிகழ்ச்சியை வருடா வருடம் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களது வாழ்க்கை முறைகளில் கலை, கலாச்சாரம் மற்றும் இசையை முக்கிய இடத்தில் வைக்கின்றனர். உலகின் பல பண்பாடுகளுக்குள், இந்தியர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சிறந்ததும், வேரூன்றியதுமாகத் திகழ்கின்றன.
நாளுக்கு நாள் மறைந்து வரும் நம் பாரம்பரிய கலை, இசை, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு. இவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதும், அவர்கள் இதனை மதித்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதும் நம் அனைவரின் கடமையாகும் என சிவபாலன் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் போது, தெலுக் இந்தானைச் சேர்ந்த ஸ்ரீ அக்னி மற்றும் ஷைனிங் ஸ்டார்ஸ் நடனக் குழுவினர் பரதநாட்டியம், கரகாட்டம், மயிலாட்டம், கதகளி, கிராமிய நடனங்கள் போன்ற பாரம்பரிய நடனங்களை அரங்கேற்றினர். பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டு, இசையின் அழகை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நிகழ்ச்சி தொடர்ந்தது. யோகா மாஸ்டர் சங்கர் இராமன் தலைமையிலான குழுவும், யோகா மற்றும் சுய வளர்ச்சி தொடர்பான படைப்புகளை அரங்கேற்றினர்.
இந்நிகழ்ச்சியில், கீழ்ப்பேராக் மற்றும் பாகான் டத்தோ ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற கல்வியாளர்கள், நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மற்றும் ஈப்போ, தெலுக் இந்தான், பாகான் டத்தோ ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
The post மறைந்து வரும் இந்தியர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், இசையை பேணிக் காத்திடல் அவசியம் – சிவபாலன் வலியுறுத்தல். appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.