இதயம் செயலிழந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 வயது நபருக்கு கடந்த நவம்பர் மாதம் சிட்னியில் உள்ள புனித வின்சென்ட் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கினார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு மனித இதயம் பொருத்தப்பட்டது.
இதய செயலிழப்புக்கு ஒரு அற்புதமான தீர்வு
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 17.9 மில்லியன் கணக்கான மக்கள் இதய நோய்கள் காரணமாக உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு, சரியான நேரத்தில் நன்கொடை கிடைக்காததே உயிரிழப்புக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இந்நிலையில் செயற்கை இதயத்தின் வளர்ச்சியானது புதிய நம்பிக்கையை அளிக்கிறது. இது தவிர நன்கொடையாளர் கண்டுப்பிடிக்கப்படும் வரை இதய நோயாளிகளை உயிருடன் வைத்திருக்க இது உதவுகிறது.
செயற்கை இதயம் எவ்வாறு செயல்படுகிறது?
BiVACOR என்பது ஒரு டோட்டல் ஆர்டிபிசியல்லி ஹார்ட் (TAH). இதில் ஒரே ஒரு நகரும் பகுதி மட்டுமே உள்ளது. மேலும், இந்த BiVACOR செயற்கை இதயம் ஆனது மேக்னெட்டிக்கல்லி லெவிட்டட் ரோட்டார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது அதிவேக ரயில்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் போன்றது. இது உடல் மற்றும் நுரையீரலுக்குள் ரத்தத்தை பம்ப் செய்கிறது. இதன் மூலம் இதயத்தின் இரண்டு வென்ட்ரிக்கிள்களின் வேலையைச் செய்கிறது.
BiVACOR சர்வதேச இதய மாற்று அறுவை சிகிச்சையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், இதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் இது ஒரு மைல்கல் என்றும் அத்துறையில் உள்ள நிபுணர்கள் கூறுகின்றனர். செயின்ட் வின்சென்ட்ஸின் இதயநோய் நிபுணரான பேராசிரியர் கிறிஸ் ஹேவர்ட், இந்த சிகிச்சையின் வெற்றியானது உலகளாவிய இதய செயலிழப்பு சிகிச்சையை மாற்றியமைக்க முடியும் என்று கூறினார்.
மேலும், அடுத்த பத்தாண்டுகளுக்குள், நன்கொடையாளர்கள் கிடைக்கும் வரை இதயத்திற்காக காத்திருக்க முடியாதவர்களுக்கு செயற்கை இதயங்கள் ஒரு விருப்பமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இதயநோய் நிபுணர் பேராசிரியர் டேவிட் கோல்குஹவுன், செயற்கை இதயம் எவ்வளவு காலம் உயிரைக் காப்பாற்றும் என்பது நிச்சயமற்றது. இது மனித உடலில் முழுமையாக வேலை செய்வதற்கு இன்னும் சில மேம்பாடுகள் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதய செயலிழப்பு அறிகுறிகள்
இதய செயலிழப்புக்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்று சுவாசிப்பதில் சிரமம் ஆகும். அத்துடன் தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படலாம். இதுதவிர கால்கள், கணுக்கால், பாதங்கள் மற்றும் வயிறு ஆகியவற்றில் வீக்கம் ஏற்படுவதும் ஒரு பொதுவான அறிகுறி ஆகும். மேலும், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, தொடர்ந்து மூச்சுத்திணறல் அல்லது இருமல், மார்பு வலி ஆகியவையும் ஏற்படலாம். இந்த அறிகுறிகளில் ஏதேனும் தீவிரமடைந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இதய செயலிழப்பை தடுக்கும் நடைமுறைகள்
புகைப்பிடிப்பதைத் தவிர்க்கவும்: புகைப்பிடிப்பதை நிறுத்துவது இதய செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
உடற்பயிற்சி: இதய ஆரோக்கியத்தை பராமரிக்க வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
சத்தான உணவைப் பின்பற்றுங்கள்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் ப்ரோடீன்கள் நிறைந்த சத்தான உணவைத் தேர்ந்தெடுங்கள். அதே நேரத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிகப்படியான உப்பு எடுத்துக் கொள்வதை குறைக்கவும்.
ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும்: உங்கள் எடையை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருப்பது இதயத்தின் அழுத்தத்தை குறைக்கிறது.
மன அழுத்தத்தை குறைக்கவும்: மன அழுத்தத்தை குறைக்க தியானம், ஆழ்ந்த சுவாசம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளை செய்யுங்கள்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்: உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற பிரச்சனைகள் இருந்தால், உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.
March 19, 2025 8:47 AM IST
மருத்துவ வரலாற்றில் அதிசயம்.. செயற்கை இதயம் மூலம் 100 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்த ஆஸ்திரேலியர்!

