ஆனால், இங்கு இருக்கும் முக்கிய சிக்கல் என்னவென்றால், ஒருவர் முதல் முறையாக மருத்துவ காப்பீட்டை பெறுவது தான். மேலும், புதிய காப்பீட்டாளருக்கு இது கடினமானதாக இருக்கலாம். எனினும், மருத்துவ காப்பீட்டில் இணையும் போது, பாலிசியில் எவ்வளவு மற்றும் எப்போது செலவிட வேண்டும் என்பதை பயனர்கள் கவனிக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில், பாலிசியின் பல்வேறு நன்மைகள், வெளிநோயாளிகள் பிரிவு பராமரிப்பு, நோ க்ளைம் போனஸ் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய ரைடர்களை மக்கள் பெறுகிறார்கள். இது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், ரைடர்கள் என்றால் என்ன, ஒரு நபர் ஒரு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் என்னென்ன ரைடர்களைப் பெற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
எனவே, ஒரு மருத்துவ காப்பீட்டை பெறுவதற்கு முன், ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டிய ரைடர்கள் மற்றும் அவற்றின் வகைகளைப் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
ரைடர்கள் என்றால் என்ன?: மருத்துவ காப்பீட்டில் ரைடர்களைச் சேர்ப்பது, ஒருவரின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட விரிவான காப்பீட்டைப் பெற உதவும், இதன் மூலம் ஒட்டுமொத்த நிதிப் பாதுகாப்பையும், மன அமைதியையும் மேம்படுத்த முடியும். காப்பீட்டை பொறுத்தவரையில், “ரைடர்” என்பது கூடுதல் பாதுகாப்பு அல்லது நன்மைகளை வழங்கும் ஒரு அடிப்படை பாலிசியின் கூடுதல் அம்சமாகும். இது ஒருவரின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் அபாயங்களை பூர்த்தி செய்ய உங்கள் காப்பீட்டுத் திட்டத்தைத் தனிப்பயனாக்கம் செய்ய அனுமதிக்கிறது.
மகப்பேறு காப்பீடு: அனைவருக்குமே மருத்துவ காப்பீடு தேவை தான் என்றாலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு காப்பீடு அவசியம். இது பிரசவக் கட்டணம், மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய செலவுகள், பராமரிப்பு மற்றும் சில சூழ்நிலைகளில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான செலவுகள் போன்ற மருத்துவச் செலவுகளை உள்ளடக்கியது. இந்தக் காப்பீடானது, காப்பீட்டு நிறுவனத்தைப் பொறுத்து 9 மாதங்கள் முதல் 6 ஆண்டுகள் வரையிலான காத்திருப்பு காலத்திற்குப் பிறகு கிடைக்கும்.
தீவிர நோய் காப்பீடு அல்லது தனிப்பட்ட விபத்து காப்பீடு: இதய நோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது புற்றுநோய் போன்ற தீவிரமான நோயால் ஒருவர் பாதிக்கப்படும் போது, காப்பீட்டுத் தொகைக்கு சமமான ஒரு மொத்தத் தொகையை இந்த ரைடர் பாலிசிதாரருக்கு வழங்குகிறது. 90 நாட்கள் காத்திருப்பு காலத்துடன் வரும் இந்த தீவிர நோய் காப்பீடானது, க்ளைம் பெறப்பட்ட பிறகு இல்லாமல் போகும். இது ஒருவரின் மருத்துவமனைக் கட்டணத்தைச் செலுத்துவது மட்டுமில்லாமல், நோயிலிருந்து குணமடையும் போது சம்பந்தப்பட்டவரின் வாழ்க்கை முறையைப் பராமரிப்பதற்கு ஒரு அவசரகால நிதியாக வரும். ஒருவரது குடும்பத்தில் தீவிரமான நோய்களின் வரலாறு இருந்தால் அல்லது உடல் ரீதியாக ஒருவர் ஆபத்தை எதிர்கொண்டால் அல்லது உளவியல் ரீதியாக மன அழுத்தத்தை தரும் வேலைகளைச் செய்தால், இந்த ரைடரை பெறுவது வசதியாக இருக்கும்.
மருத்துவமனை ரொக்க காப்பீடு: மருத்துவமனை செலவுகளின் உண்மையான அளவைப் பொருட்படுத்தாமல், மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் பாலிசிதாரருக்கு உத்தரவாதமான தினசரி ரொக்கப் பலனை வழங்குவதில் இந்த அம்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. பயணம், உணவு மற்றும் நிலையான மருத்துவ காப்பீட்டின் கீழ் பொதுவாக உள்ளடக்கப்படாத பிற செலவுகளைச் சமாளிக்க இந்த பணம் உதவியாக இருக்கும். இந்த ரைடரை செயல்படுத்த காப்பீடு செய்யப்பட்ட நபர் குறைந்தது 24 மணிநேரம் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
அறை வாடகையில் விலக்கு: மருத்துவமனையில் தங்கியிருக்கும் நோயாளி, ஒவ்வொரு நாளும் செலுத்த வேண்டிய அறை வாடகையில் இருந்து விலக்கு பெற இந்த ரைடர் உதவியாக இருக்கும். இதனால், பாலிசிதாரர்கள் கூடுதல் செலவைப் பற்றி கவலைப்படாமல் சிறந்த சிகிச்சையைத் தேர்வுசெய்ய முடியும். இது அறை வாடகை வகையின் மீதான அனைத்து விதமான கட்டுப்பாட்டையும் நீக்குகிறது. காப்பீடு செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் சேரும் போது கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் தங்களின் விருப்பப்படி மருத்துவமனை அறையில் தங்குவதற்கு இது வழிசெய்கிறது.
வெளிநோயாளிகள் பிரிவு: குறிப்பாக, குழந்தைகளைக் கொண்ட இளம் தம்பதிகளுக்கு வெளிநோயாளிகள் பிரிவு கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கலாம். இதுபோன்ற காலத்தில் இந்த ரைடர் முக்கிய பங்கு வகிக்கும். மருத்துவர் வருகை, நோயறிதல் சோதனைகள், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் போன்ற மருத்துவச் செலவுகளைச் செலுத்த ஓபிடி ரைடர் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் உங்கள் பாக்கெட்டிலிருந்து செலுத்த வேண்டிய திடீர் செலவுகளை தவிர்க்க முடியும். அடிக்கடி மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் குறைந்த விலை சிகிச்சைகளுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
March 20, 2025 12:19 PM IST
மருத்துவ காப்பீடு வாங்க போறீங்களா? முடிவெடுப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!!

