கங்கார்:
வேரோடு சாய்ந்த மரம் மோட்டார் சைக்கிள் மீது திடீரென விழுந்ததில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பெண்ணின் கரு கலைந்தது, அதேநேரம் அவர் அப்பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் இங்கு அருகே உள்ள சிம்பாங் எம்பாட், ஜாலான் கம்போங் படாங் பென்டாவில் நடந்தது.
இதில் 18 வயதான நுராலியா சியாஷ்ரீனா ரோஸ்லான் அனுவர் என்ற பாதிக்கப்பட்ட கர்ப்பிணித்தாயின் தலையில் காயம் ஏற்பட்டது மற்றும் அவரது இடது மற்றும் வலது இடுப்பு எலும்புகள் உடைந்தன என்று கங்கார் மாவட்ட போலீஸ் துணை தலைவர் பேயா அப்துல் வஹாப் கூறினார்.
அதேநேரம் அவரது கணவர் முஹமட் டேனிஷ் ஹக்கீம் ஹனிசாம், 18, என்பவருக்கு வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
“தம்பதியினர் சிம்பாங் எம்பட்டில் உள்ள சுங்கை பாருவில் உள்ள ஒரு உணவகத்திலிருந்து கம்போங் சுங்கை புகிஸில் உள்ள தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்றும், இதில் மனைவி மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டும், அவரது கணவன் பின்னால் உட்கார்ந்துகொண்டும் பயணித்தனர்.
“சம்பவம் நடந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, வேரோடு சாய்ந்த மரம் அவர்களின் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக துவாங்கு பௌசியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக பேயா கூறினார்.


