Last Updated:
தேநீர் கடைக்குப் பக்கத்தில் ஒரு மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன், இன்னும் சில நிமிடங்களில் தனது உயிர் பறிபோகும் என்று நினைத்திருக்க மாட்டான்.
ஆகாஷ் பட்னி என்ற பதினான்கு வயது சிறுவன், அகமதாபாத்தின் மேகனிநகர் பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்திற்கு அருகில் உள்ள தனது குடும்பத்திற்குச் சொந்தமான தேநீர் கடைக்குப் பக்கத்தில் ஒரு மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தபோது, இன்னும் சில நிமிடங்களில் தனது உயிர் பறிபோகும் என்று நினைத்திருக்க மாட்டான். விதியின் கொடூரம் இப்படித்தான் இருக்குமென்றால் யாரால் என்ன செய்ய முடியும்? இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றின் புள்ளி விவரமாகத் தற்போது அந்தச் சிறுவன் மாறிப்போனான்.
ஜூன் 12ஆம் தேதி பிற்பகல் 1:39 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளிலேயே கீழே விழுந்து வெடித்ததில், அதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் கட்டிடங்களில் மோதி கீழே விழுந்தபோது அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வசித்த சிலரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அதில் ஆகாஷ் என்ற இந்தச் சிறுவனும் ஒருவன்.
“ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்திற்கு அருகில் தேநீர் கடை இருந்துள்ளது. அதன் அருகிலிருந்த மரத்தின் கீழ் ஆகாஷ் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். அந்த நேரத்தில் அவனது தாயார் சீதாபென் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். விமானம் கீழே விழுந்தபோது, அதிலுள்ள பெரிய உலோகத் துண்டு ஆகாஷின் தலையில் விழுந்துள்ளது. அதன்பிறகு தீயில் கருகிப்போனான்” என்று அவரது அத்தை சந்தாபென் கூறுகிறார். தற்போது அவர் மற்ற உறவினர்களுடன் அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறைக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்.
ஆகாஷைக் காப்பாற்ற முயன்றபோது சீதாபென்னும் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானார். அவரும் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகாஷின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்குக் கருகிப் போயிருந்தது. ஆகாஷின் தந்தை டி.என்.ஏ. பரிசோதனைக்காக மாதிரிகளை அளித்துள்ளார்.
ஆனந்த் நகரைச் சேர்ந்த சுரேஷ் மிஸ்திரி, தனது 21 வயது மகள் க்ரினா மிஸ்திரியின் உடலை அடையாளம் காணும் பணியின் ஒரு பகுதியாக, சிவில் மருத்துவமனையின் பிணவறையில் தனது டி.என்.ஏ. மாதிரியைச் சமர்ப்பித்துள்ளார்.
“ஒரு வருடத்திற்கு முன்பு க்ரினாவுக்கு லண்டனுக்கு வேலைக்குச் செல்ல அனுமதி விசா கிடைத்தது. சமீபத்தில் அவர் ஆனந்துக்குத் திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கினார். பல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, துரதிர்ஷ்டவசமாக இந்த விமானத்தில்தான் அவர் லண்டனுக்குச் செல்ல வேண்டுமா?” என்று டி.என்.ஏ. சோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கும் சுரேஷ் கதறி அழுகிறார்.
“எல்லாம் இங்கு நன்றாக இருக்கிறது என்றும், நீங்கள் ஆனந்துக்குத் திரும்பிச் செல்லலாம் என்றும் விமானத்திலிருந்து எங்களிடம் போனில் பேசினாள். நாங்கள் வீட்டிற்கு வந்தபிறகுதான், விமான விபத்து பற்றி எங்களுக்குத் தெரியவந்தது. என் அன்பான மகள் க்ரினா இனி இல்லை என்று இன்னும் என்னால் நம்ப முடியவில்லை” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார் சுரேஷ்.
June 14, 2025 3:59 PM IST
மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழப்பு…! நடந்தது என்ன…?


