Last Updated:
West Bengal Election | மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவில் 92 சதவீதம் பேர் வாக்களித்திருப்பது யாருக்குச் சாதகமாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை அப்படி ஓரமாய் போய் விளையாடுங்கள் எனக் கூறி ஓரங்கட்டிவிட்டு, முதலமைச்சர் நாற்காலிக்கு திரிணமுல் காங்கிரசும், பாஜகவும் கடுமையாக மோதிக் கொண்டிருக்கின்றன. எஸ்ஐஆரில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டது இரு கட்சிகளுக்குமிடையிலான மோதலை கடுமையாக அதிகரித்துள்ளது.
தாங்கள் வெல்ல வாய்ப்புள்ள மாநிலமாக மேற்கு வங்கத்தை பார்ப்பதால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மாறி, மாறி பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மம்தாவோ மேற்கு வங்கம் மட்டுமின்றி டெல்லியையும் கைப்பற்றுவேன் என்கிறார். பாஜக – திரிணமுல் கட்சித் தொண்டர்கள் சாலைகளில் மோதலால் தேர்தல் களமே ரணகளமாக மாறியது.
2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 92% வாக்குகள் பதிவானது பரபரப்பைக் கூட்டியுள்ளது. தேர்தலில் 3.6 கோடி பேர் வாக்களித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில் 70 லட்சம் பேர் நீக்கப்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிக அளவில் போலி வாக்காளர்களும், இறந்த வாக்காளர்களின் பெயர்களுமாக 70 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் வாக்களித்ததால் 92 சதவீதம் வாக்குப்பதிவானதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எஸ்ஐஆர் இல்லாவிட்டால் வாக்குப்பதிவு 83 சதவீதமாகவே இருந்திருக்கும் என்றும் மேலும், பிகாரிலும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரித்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுதவிர, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து தொழிலாளர்கள் வாக்களிக்க அதிக அளவில் மேற்கு வங்கம் திரும்பியதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாகவே மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு அதிகமாக இருப்பது இயல்பு என்றும் அதற்கு அம்மாநிலத்தின் நீண்ட நெடிய அரசியல் பாரம்பரியப் பின்னணியும் முக்கிய காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மகளிர் வாக்கு சதவீதம் அதிகரித்து வருவதும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.
அதிக அளவில் வாக்குப்பதிவு நிகழ்ந்தால், அது ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று கூறப்பட்டாலும் கடந்த பத்தாண்டுகளில் பல முடிவுகள் அதற்கு மாறாகவே இருந்துள்ளன. 2021 தேர்தலில் இதுபோல் அதிக வாக்குப்பதிவு அதிகமாக இருந்தபோதும் ஆளுங்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனால் அதிக வாக்குப்பதிவே ஆளுங்கட்சிக்கு எதிரானது என்று சொல்ல முடியாது என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இதை உணர்ந்தே மோடியும், அமித் ஷாவும் 2ம் கட்ட பரப்புரையின் வேகத்தை கூட்டியுள்ளனர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
மம்தா vs பாஜக…. 92% வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் யாருக்கு சாதகம்? – 2021 வரலாறு திரும்புமா? | West Bengal Election


