Courtesy: nayan
மன்னார் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வீதிகளில்
பயணிப்போருக்கும் இடையூறாக மீன் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடும்
நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளில்
காணப்பட்ட வலைகளும் அகற்றப்பட்டுள்ளன.
மன்னார் ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர், சாந்திபுரம் பனங்கட்டு கொட்டு
உள்ளிட்ட பல பகுதிகளில் சில கடற்றொழிலாளர்கள் வீதிகளில் வலைகளை ஆபத்தான முறையில் உலர
விடுவதால் விபத்துகள் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாகக்
குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
நகரசபையால் பலமுறை எச்சரிக்கை
குறித்த செயற்பாட்டைக் கைவிடுமாறு நகரசபையால் பலமுறை எச்சரிக்கைகள்
விடுக்கப்பட்டும், சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீதிகளில்
வலைகளை உலர விடுகின்றனர்.

அதுமட்டுமன்றி, வலைகளை அகற்றுமாறு அறிவுறுத்தும்போது, “வலைகளை உலர விட
வேண்டாம் என்றால் வேறு எங்கே உலர விடுவது?” எனக் கேள்வியெழுப்பி, தமது
செயற்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதிகள் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான பொது இடங்களாகும்
ஆனால், தமது தொழில் தேவைகளைக் காரணம் காட்டி, பொதுமக்களின் பாதுகாப்பைப்
புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என பாதிக்கப்படும்
மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
வீதிகள் அனைவரும் பாதுகாப்பாகப் பயணிப்பதற்கான பொது இடங்களாகும் என்பதைச்
சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் என பொது மக்கள் சுட்டிகாட்டுகின்றனர்

இந்நிலையில், வீதிகளில் கிடக்கும் வலைகளில் சிக்கி விழும் சம்பவங்களும்
தொடர்சியாக மன்னாரில் பதிவாகி வருகின்றன.
கடந்த வருடம் கர்ப்பிணித் தாய் ஒருவர் வலையில் சிக்கி விழுந்ததாகவும், நேற்று
சிறுமி ஒருவரும் வலையில் சிக்கி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இதனையடுத்து, வீதிகளில் மீன் வலைகளை உலர விடுவதை உடனடியாக நிறுத்துமாறு
மன்னார் நகரசபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இனிவரும் காலங்களில் இவ்வாறு
செயற்படுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வீதிகளில்
காணப்படும் வலைகள் அகற்றப்பட்டு அழிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |




