கேரளாவில் பிறந்த பி.என்.சி.மேனன், தனது 10 வயதில் தந்தையை இழந்தார். மேலும், குடும்பப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்ட அவரால், முறையான கல்வியையும் பெற முடியவில்லை, பி.காம். பட்டத்தை முடிப்பதற்கு முன்பே கல்லூரியை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். பின்னர், தனது வாழ்க்கையை சுயமாக கட்டமைத்துக் கொண்ட அவர், ரியல் எஸ்டேட் தொழில் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கை
மேனனின் முழுப் பெயர் புத்தன் நடுவக்கட் செந்தமரக்ஷா மேனன், சுருக்கி பி.என்.சி.மேனன் என்று அழைப்பார்கள், இவர் 1948இல் கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தார். சோபா மேனனை மணந்த அவர், தனது மனைவி பெயரில் தொழில் தொடங்கினார். இவர்களுக்கு பிந்து மற்றும் ரேவதி என இரு மகள்களும், ரவி பி.என்.சி மேனன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
தொழில் மற்றும் தொண்டு
1976ஆம் ஆண்டு தனது 26 வயதில், வெறும் 50 ரூபாய் பணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு மேனன் ஓமனில் குடிபெயர்ந்தார். அங்கு, அவர் வெற்றிகரமான இன்டீரியர் டெக்கரேஷன் தொழிலை உருவாக்கினார். மேனன் இறுதியில், தனது சோபா குழுமத்தை கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக விரிவுபடுத்தினார். இது ஓமன், கத்தார், பஹ்ரைன், புருனே மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இயங்கி வருகிறது.
1995ஆம் ஆண்டில், மேனன் பெங்களூருவில் சோபா டெவலப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தையும் நிறுவினார். 2006ஆம் ஆண்டில் பாம்பே பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம், நாடு முழுவதும் பல சிறந்த திட்டங்களின் மூலம் கட்டிடங்களை எழுப்புவதற்கு பெயர் பெற்றது. மேனனின் மகன் ரவி, நிறுவனத்தின் தற்போதைய தலைவராகவும், மேனன் எமரிட்டஸ் தலைவராகவும் உள்ளார்.
1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்ரீ குரும்பா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மூலம் மேனன் பலருக்கு உதவி வருகிறார். இது தவிர, அவர் தனது மனைவி சோபாவுடன், தி கிவிங் ப்ளெட்ஜ் என்கிற இலாப நோக்கமற்ற நிறுவனத்திலும் இணைந்துள்ளார். அவர்களின் செல்வத்தில் குறைந்தது பாதியை நன்கொடையாக வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நிகர மதிப்பு
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி, மேனனின் நிகர மதிப்பு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது கிட்டத்தட்ட ரூ.29,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஓமன் மற்றும் இந்தியா என இரண்டு நாடுகளிலும் உள்ள பணக்காரர்களில் ஒருவராக அவரை மதிப்பிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவரால் அவருக்கு பிரவாசி பாரதிய சம்மான் (வெளிநாட்டு இந்திய விருது) விருதும் வழங்கப்பட்டது.
மனைவி பெயரில் தொழில், ரூ.29,000 கோடிக்கு அதிபதி… வளைகுடா நாடுகளில் ரியல் எஸ்டேட் அதிபர் என்றால் இவர்தான்…!

